உடல்நல பிரச்சனைகளில் ஒன்றாக யூரிக் அமிலம் இன்று பொதுவானது. ப்யூரின்கள் உடைக்கப்படும்போது உருவாகும் இந்த யூரிக் அமிலம், இரத்தத்தில் அதிகமாகும் போது ஹைப்பர்யூரிசிமியா மற்றும் கீல்வாதம் போன்ற கடுமையான உடல்நல பிரச்சனைகளை உருவாக்கலாம். ஆயுர்வேதம் யூரிக் அமிலத்தைக் குறைக்கவும், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் சில சக்திவாய்ந்த மூலிகைகளையும் உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களையும் பரிந்துரைக்கிறது.
யூரிக் அமிலம் குறைய மூக்கிரட்டை மூலிகை பானம்
ஆயுர்வேதத்தில் சக்திவாய்ந்த மூலிகையாக மூக்கிரட்டை பார்க்கப்படுகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் டையூரிடிக் பண்புகள் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகின்றன. உடலில் உள்ள அதிகப்படியான யூரிக் அமிலத்தை வெளியேற்றுவதால், மூட்டுகளில் அதன் தேக்கம் குறைகிறது. இது கீல்வாதம் போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கும்.
எப்படி எடுப்பது?
- மூக்கிரட்டை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
- ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் பொடியைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
- காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.
யூரிக் அமிலம் குறைய குடுச்சி தேநீர்
குடுச்சி (சீந்தில்) ஆனது உடல் நச்சு நீக்கும் பிரபலமான ஆயுர்வேத மூலிகையாகும். இதன் யூரிகோசூரிக் பண்புகள் சிறுநீர் வழியாக யூரிக் அமிலத்தை வெளியேற்றச் செய்கிறது. இதை தேநீராக்கி குடிப்பது யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்தும். இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
எப்படி எடுப்பது?
- குடுச்சி துண்டுகளை (சீந்தில்) ஒரு டம்ளர் நீரில் சேர்க்கவும்.
- நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, இளஞ்சூடாக குடிக்கவும்.
யூரிக் அமிலம் குறைய தனியா விதைகள்
தனியா விதைகள் ஹார்மோன் சமநிலைக்கு உதவுவதுடன், உடலுக்கு குளிர்ச்சியையும், நச்சு நீக்கும் தன்மையையும் கொண்டது. உடல் எடை குறைப்பிலும் இவை பரிந்துரைக்கப்படுகின்றன. தனியா விதைகள் இரத்தத்தில் இருந்து அதிகப்படியான யூரிக் அமிலத்தை அகற்றச் செய்து, சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது. ஆயுர்வேதத்தில் வளர்சிதை மாற்ற கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க இவை பயன்படுத்தப்படுகின்றன.
எப்படி எடுப்பது?
- ஒரு டம்ளர் நீரில் ஒரு டீஸ்பூன் தனியா ஊறவைத்து இரவு முழுவதும் வைக்கவும்.
- மறுநாள் காலை வடிகட்டி குடிக்க வேண்டும்.
யூரிக் அமிலம் குறைய துளசி வேப்பிலை தேநீர் / கஷாயம்
துளசி தொற்று நீக்குவதுடன் இரத்தத்தை சுத்திகரிக்கவும் உதவுகிறது. இது ஒரு சக்திவாய்ந்த நச்சு நீக்கும் மூலிகை. வேப்பிலையின் கசப்பு தன்மை உடல் நச்சு நீக்கி, கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. வேப்பிலை உடல் வெப்பத்தை குளிர்வித்து, வளர்சிதை மாற்றத்தை சமநிலைபடுத்துகிறது. இதனால் யூரிக் அமில படிகங்கள் உடலில் தங்குவது தடுக்கப்படுகிறது.
எப்படி எடுப்பது?
- ஒரு டம்ளர் நீரில் வேப்பிலை மற்றும் துளசி இலைகள் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
- வடிகட்டி இளஞ்சூடாக குடிக்கவும்.
யூரிக் அமிலம் குறைய திரிபலா தேநீர்
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்று அற்புத மருத்துவ குணங்களின் சேர்க்கையே திரிபலா. இது உடலை இயற்கையாக சுத்தப்படுத்துகிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது. திரிபலா சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, யூரிக் அமிலம் தேங்குவதைத் தடுக்கிறது. உடலில் தோஷங்களை சமன்செய்யும் திரிபலா, நச்சுக்களை நீக்கும் சிறந்த பானமாக செயல்பட்டு, யூரிக் அமிலம் தொடர்புடைய வீக்கத்தை குறைக்கிறது.
எப்படி எடுப்பது?
- ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் திரிபலா பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.
- இளஞ்சூட்டில் குடிக்கவும். குறிப்பாக இரவு படுக்கைக்கு முன்பு குடிக்கலாம்.
யூரிக் அமிலம் குறைய ஓமம் விதைகள்
ஓமம் விதைகள் நறுமணம் மற்றும் கைவைத்தியத்துக்கு பயன்படுத்தக்கூடியவை. இவை மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளன. செரிமானத்துக்கு நன்மை அளிக்கும் ஓமம், உடல் நச்சுக்கள் நீங்கவும் உதவுகிறது.
எப்படி எடுப்பது?
- தண்ணீரை கொதிக்க வைத்து சிறிது ஓமம் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
- இறக்கி வடிகட்டி இளஞ்சூட்டில் குடிக்கவும். இனிப்பு தேவையெனில் சேர்த்துக் கொள்ளலாம். காலை நேரத்தில் குடித்து வரலாம்.
யூரிக் அமிலம் அதிகமாக இருப்பவர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
செய்ய வேண்டியவை
- முழுதானிய உணவுகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் நீர்ச்சத்துடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- மூலிகை தேநீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
- தினசரி நீரேற்றம் மற்றும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
- உடல் எடையை நிர்வகிப்பது கீல்வாத அறிகுறிகளை மேம்படுத்தும்.
- யூரிக் அமில அளவு குறையவில்லை என்றால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
செய்யக்கூடாதவை
- அதிக பியூரின் கொண்ட உணவுகள் (சிவப்பு இறைச்சி, கடல் உணவு, உறுப்பு இறைச்சி) தவிர்க்க வேண்டும்.
- சர்க்கரை பானங்கள் மற்றும் மதுபானங்களைத் தவிர்க்க வேண்டும்.
- பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நோக்கங்களுக்காக மட்டுமே. உங்களுக்கு பாதுகாப்பான ஒன்றை தேர்வு செய்ய துறை சார்ந்த நிபுணரிடம் ஆலோசிக்கலாம். இங்கு வழங்கப்பட்ட தகவலின் துல்லியம், நம்பகத்தன்மைக்கு jothidam360 பொறுப்பேற்காது.