முகத்தில் வடுக்கள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதிகப்படியான சீபம் சுரப்பு பருக்களை உருவாக்கி, அவை கருமையாகி வடுக்களாக மாறலாம். சென்சிடிவ்வான சருமம் கொண்டவர்களுக்கு சிறிய காயங்கள் கூட தழும்புகளாக மாறும். அதேபோல, தீக்காயங்கள் ஏற்பட்டாலும் அவை தழும்புகள் மற்றும் வடுக்களாக மாறும். இன்றைய காலகட்டத்தில் சருமப் பிரச்சினைகளுக்கு பல சீரம்கள் பயன்படுத்தப்பட்டாலும், கீழ்க்கண்ட வீட்டு வைத்தியங்களும் உங்களுக்கு நல்ல பலன் தரும்.
பரு வடுக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைய உதவும் இயற்கை வைத்தியங்கள்:
1. பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை சருமத்திற்கு பயன்படுத்தலாமா, கூடாதா என்று இரண்டு வகையான கருத்துகள் உள்ளன. எனவே, பயன்படுத்துவதற்கு முன் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது. பேக்கிங் சோடா ஒரு ப்ளீச்சிங் ஏஜென்ட் போல செயல்பட்டு, தழும்பு, வடுக்கள் மற்றும் கருமை ஆகியவற்றை மறையச் செய்யும் தன்மை கொண்டது. இதை அப்படியே சருமத்தில் பயன்படுத்தக் கூடாது; தண்ணீர் சேர்த்து அதன் வீரியத்தைக் குறைத்த பிறகே அப்ளை செய்ய வேண்டும். இல்லையென்றால், சருமம் வெந்தது போல ஆகிவிடும்.
2. தேங்காய் எண்ணெய்
கேரளப் பெண்களின் பளபளப்பான சருமத்திற்கு முதன்மையான காரணங்களில் ஒன்று தேங்காய் எண்ணெய் தான். தேங்காய் எண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, சருமத்தைப் பளபளப்பாக மாற்றும். சிலருக்கு பரு வந்த இடத்தில் தழும்புகள் ஏற்படுவதோடு, சில சமயங்களில் அரிப்பையும் உண்டாக்கும். அந்த இடத்தில் தொடர்ந்து தேங்காய் எண்ணெய் அப்ளை செய்து வர, அரிப்பு குறைவதோடு, நாளடைவில் அந்த தழும்புகளும் மறையும்.
3. கற்றாழை
கற்றாழை ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு தாவரம். வெயிலைத் தாங்கி வளரக்கூடியது என்றாலும், நமக்கு நிறைய நீர்ச்சத்தைக் கொடுக்கும். கற்றாழையில் உள்ள ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் சருமத்தில் ஏற்படும் எரிச்சல், தழும்புகள், நீண்ட நாளாக இருக்கும் தழும்புகள் ஆகியவற்றைக் குறைக்கும். தொடர்ந்து கற்றாழை ஜெல்லை சருமத்துக்கு பயன்படுத்தி வரும்போது உங்கள் சருமத்தின் அமைப்பு மேம்படும். இது சருமத்தை மாய்ஸ்ச்சராக வைத்திருக்கும்.
4. வைட்டமின் ஈ ஆயில்
வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் எல்லோருடைய வீடுகளிலும் கட்டாயமாக இருக்க வேண்டிய ஒன்று. சரும அழகை மேம்படுத்த மட்டுமல்லாமல், பல ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களுக்கும் இது பயன்படும். வைட்டமின் ஈ ஆயில் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் கொண்டது. இது சருமத்தில் பருக்கள் வருவதற்குக் காரணமாகும் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது. இது பருக்களை விரட்டுவது மட்டுமல்லாமல், பருக்கள் வந்த இடத்தில் ஏற்பட்ட கரும்புள்ளிகள், நாளடைவில் விடாப்பிடியான தழும்புகளாக மாறிவிடும். அத்தகைய நாள்பட்ட தழும்புகளையும் கொஞ்சம் கொஞ்சமாக மறையச் செய்து, வடு இருந்த இடமே தெரியாமல் ஆக்கும் சூப்பர் ரெமிடி இந்த வைட்டமின் ஈ ஆயில்.
5. உருளைக்கிழங்கு ஜூஸ்
சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு உருளைக்கிழங்கு ஒன்றே போதும். குறிப்பாக, உருளைக்கிழங்கு சருமத்தில் உள்ள கருமையைப் போக்கி, தழும்புகளையும் மறையச் செய்யும். உருளைக்கிழங்கில் உள்ள பைட்டை கெமிக்கல் சருமத்தில் உள்ள இன்ஃபிளமேஷன்களை குறைப்பதோடு, பருக்கள் வராமல் தடுக்கும்.
6. தேன்
தேன் பல மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது. தேனில் ஹீலிங் பண்புகள் அதிகம். சருமத்தில் ஏற்படும் தீக்காயங்கள், ஹெர்பீஸ், வாய்ப்புண் உள்ளிட்டவற்றைக் குணப்படுத்தும். புதிய செல்களை உருவாக்கும். அதுமட்டுமின்றி, முகத்தில் பருக்களால் ஏற்படும் வடுக்களை இருந்த இடம் தெரியாமல் மங்கச் செய்யும் தன்மை தேனுக்கு உண்டு.
7. லாவெண்டர் எண்ணெய்
சருமத்திற்கு பயன்படுத்த பல்வேறு எசன்ஷியல் ஆயில்கள் சந்தைகளில் கிடைக்கின்றன. ஆனால், வடுக்களை சரிசெய்ய லாவெண்டர் ஆயில் சிறந்தது. லாவெண்டர் ஆயிலில் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இது சருமத்தில் ஏற்படும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடும். இதன் மூலம் பருக்கள் வராமல் தடுப்பது மட்டுமின்றி, பருக்கள் வர காரணமாகும் பாக்டீரியாக்களை கொல்லும்.
இறுதியாக, மேற்கண்ட வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றுவதன் மூலம் சருமத்தில் ஏற்படும் காயங்கள், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள், அதனால் ஏற்பட்ட வடுக்கள் ஆகியவற்றைக் குறைத்து தெளிவான சருமத்தைப் பெறலாம். இந்த சரும பராமரிப்பு குறிப்புகள் உங்கள் முகப்பரு வடுக்கள் மற்றும் கரும்புள்ளிகள் பிரச்னைக்கு சிறந்த தீர்வாக அமையும்.