இந்த ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி அனுஷ்டிக்கப்படும் தேவசயனி ஏகாதசி விரதம், இந்துக்களுக்கு மிகவும் புனிதமான நாளாகும். மகாவிஷ்ணு யோக நித்திரையில் ஆழ்வார் இந்த தினத்தில், பக்தர்கள் எவ்வாறு விரதம் இருந்து அவரது அருளைப் பெறலாம், என்ன செய்ய வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து இங்கு விரிவாகக் காணலாம். இந்த ஏகாதசி விரதம் பாவங்களை நீக்கி, புண்ணியத்தை சேர்க்கும் ஒரு சக்திவாய்ந்த விரதமாகும்.
தேவசயனி ஏகாதசியின் முக்கியத்துவம்
தேவசயனி ஏகாதசி என்பது ஆஷாட மாதமான ஆனி மாத வளர்பிறையின் 11வது நாளில் வரும் ஒரு முக்கியமான விரத நாளாகும். இந்த தினத்தில் மகாவிஷ்ணு யோக நித்திரைக்கு செல்வதாகவும், அடுத்த நான்கு மாதங்களுக்கு சிவபெருமானே உலகைக் காப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன. இந்த நான்கு மாத காலமும் சுப காரியங்கள் செய்ய உகந்ததல்ல. தேவர்களும் விஷ்ணுவுடன் உறங்கச் செல்வதால், இந்த நாட்களில் செய்யப்படும் யாகம், ஹோமம் போன்ற காரியங்களில் தேவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் உண்டு. ஏகாதசி விரதம் பொதுவாக பாவங்களை நீக்கி, பெருமாளின் அருளையும், வைகுண்ட பதவியையும் தரும் என நம்பப்படுகிறது.
தேவசயனி ஏகாதசியில் செய்ய வேண்டியவை
- தானம்: ஏழைகளுக்கும், பிராமணர்களுக்கும் இனிப்பு, தானியங்கள், பழங்கள், ஆடைகள் போன்றவற்றை தானமாக வழங்குவது வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களைக் குறைக்கும்.
- ஆன்மீக பயிற்சி: பக்திக்கும், ஆன்மீக வளர்ச்சிக்கும் இந்த நாள் ஏற்றது. விஷ்ணு மந்திரங்கள், பகவத் கீதை, பாகவதம், விஷ்ணு புராணம் போன்ற புனித நூல்களைப் படிப்பது, விஷ்ணு சஹஸ்ரநாமம், ஹரே கிருஷ்ணா மகாமந்திரம் ஜெபிப்பது அவசியம்.
- தூய்மையான உடை: பூஜை செய்யும் போது கருப்பு நிற ஆடைகளைத் தவிர்த்து, தூய்மையான ஆடைகளை அணிய வேண்டும். பெண்கள் தலைமுடியைக் கட்டி, மரியாதையுடன் இருக்க வேண்டும்.
- மனக்கட்டுப்பாடு: கோபம், எரிச்சல் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, அமைதியான மனதுடன் அன்பான அணுகுமுறையுடன் இருக்க வேண்டும். பொய் பேசுதல், புறம்பேசுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
தேவசயனி ஏகாதசியில் தவிர்க்க வேண்டியவை
- உணவு: அரிசி, பருப்பு, அசைவம், வெங்காயம் போன்ற தானியங்கள் மற்றும் தமசீக உணவுகளை உண்ணக்கூடாது. பழங்களை மட்டும் சாப்பிடலாம். இது உடலையும் மனதையும் சுத்தப்படுத்தும்.
- அதிக தூக்கம்: அதிகமாக தூங்குவதைத் தவிர்த்து, பக்தி மற்றும் ஆன்மீகப் பயிற்சிக்கு நேரத்தை ஒதுக்க வேண்டும்.
- சுப காரியங்கள்: தேவசயனி ஏகாதசி முதல் பிரபோதினி ஏகாதசி வரை விஷ்ணு பகவான் யோக நித்திரையில் இருப்பதால், புதிய திட்டங்கள், திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற எந்தவொரு சுப காரியத்தையும் செய்யக்கூடாது.
- சவரம்: நகம், முடி வெட்டுவதை தவிர்க்க வேண்டும். இது அசுபமாகக் கருதப்படுகிறது.