பரணி நட்சத்திரத்திற்கான ஜோதிட-ஆன்மிக நடைமுறைகள் மற்றும் பரிகாரங்கள்
பரணி நட்சத்திரத்தின் பொதுவான பலன்கள்
பரணி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், சுகபோகங்களுக்கும் கலைக்கும் உரிய கிரகமான சுக்கிரனின் அம்சத்தில் பிறந்தவர்கள். பூமிக்காரகன் செவ்வாயின் ராசியில் பிறந்திருப்பதால், எலி வளையானாலும் தனிவளையே வேண்டும் என்று நினைப்பீர்கள்.
‘நட்சத்திர மாலை’ என்னும் நூல், ‘தானங்கள் பலவுஞ் செய்வான்; தந்தை தாயை பேணும்...’ என்று குறிப்பிடுகிறது. இதன்படி, துன்பப்பட்டு வருவோருக்கு ஆறுதல் சொல்வதுடன், உங்கள் கையில் இருப்பதையும் கொடுத்து உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பீர்கள். கண்ணை இமை காப்பதுபோல தாயையும் தந்தையையும் பாதுகாப்பீர்கள்.
‘ஜாதக அலங்காரம்’ என்னும் நூல், ‘தர்மவான், ஐஸ்வர்யன், மான புகழ்க் கோனாம் தாம்பூல நேயன்...’ என்று கூறுகிறது. அதாவது, தர்மம் செய்வதில் ஆர்வமுள்ளவராகவும், செல்வந்தர்களாகவும், அபிமானிகளாகவும், புகழ்பட வாழ்பவர்களாகவும், தாம்பூலப் பிரியர்களாகவும் இருப்பீர்கள்.
யவன ஜாதகம், ‘சாஸ்திரங்களைச் சொல்பவனாகவும், மனோதைரியம் உள்ளவனாகவும், அனைத்து விஷயங்களையும் அறிந்தவனாகவும் திகழ்வீர்கள்’ என்று கூறுகிறது. பிருகத்ஜாதக நூல், தொடங்கிய காரியங்கள் முடியும் வரை மன உறுதியுடன் இருப்பவர்கள் என்று குறிப்பிடுகிறது. சுக்ர நாடி நூல், அரசனைப் போல் சுகபோகமாக வாழ்வீர்கள் என்று கூறுகிறது.
பரணி தரணி ஆளும் என்ற பழமொழிக்கு ஏற்ப, அதிகாரப் பதவியில் அமர்வீர்கள். ஆளுமைத் திறன் உடையவராக இருப்பீர்கள். ஆடுகிற மாட்டை ஆடியும், பாடுகிற மாட்டை பாடியும் கறந்துவிடுவீர்கள். சமயோசித புத்தியை பயன்படுத்துவீர்கள். வீராவேசமாக பேசினால், அந்த இடத்தில் அடங்கிப் போய் நற்பெயர் ஈட்டுவீர்கள்.
இசையில் ஈடுபாடு இருக்கும். நடனம், நாட்டியம் போன்றவற்றில் உங்களையே மறந்துவிடுவீர்கள். உடுத்துகிற உடையானாலும், நடக்கிற நடையானாலும் உங்களிடம் வித்தியாசம் தெரியும். வாசனைத் திரவியங்களில் நாட்டம் உடையவர்களாகவும், ஆடம்பர உடைகளை விரும்புபவர்களாகவும் இருப்பீர்கள். புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு ஆகியவை உங்களுக்கு பிடித்த சுவைகள். ரசித்துச் சாப்பிடுவீர்கள்.
குழந்தைப் பருவத்தில் சாதுவாக இருந்தாலும் சாமர்த்தியசாலி. வகுப்பறையில் ஆசிரியர் சொல்வதை அப்படியே கேட்காமல், ஆறாம் அறிவால் சிந்தித்து மனதுக்குத் தோன்றுவதை பின்பற்றுவீர்கள். படிப்பில் திறமைசாலியாக இருப்பீர்கள். வணிகவியல், பல், கண், காது மருத்துவத் துறைகளிலும், வணிக மேலாண்மை, ஃபைனான்ஸ் துறைகளில் மிளிர்வீர்கள்.
சுற்றியிருப்பவர்களை சிரிக்க வைப்பீர்கள். பிரச்னைகளை அடிமனதில் தேக்கி வைத்துக்கொள்ளாமல் சுலபமாக எடுத்துக்கொள்வீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே என்று நினைப்பீர்கள். உல்லாசப் பயணம் போவதென்றால், மலை, அருவி, பூங்காவை பார்த்தால் ஒன்றிப்போவீர்கள்.
சக ஊழியர்களெல்லாம் உங்களைப் பின்பற்றும் அளவுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்வீர்கள். பெரிய பதவியை எளிதாக அடையும் நீங்கள், சாதுர்யமாக வேலை வாங்குவீர்கள். சலுகைகளை வாரி வழங்குவீர்கள். வேலை நிறுத்தம், அதிகாரிகளின் ஒத்துழையாமை ஆகியவற்றை சமயோசிதமாக தீர்ப்பீர்கள்.
காதல் மிகவும் பிடிக்கும். மனைவி, மக்களின் தேவையறிந்து நடந்தும், சிரமம் தெரியாமல் பார்த்துக்கொண்டும், ஈடுகொடுப்பீர்கள். சொந்த வீடு சுலபமாக அமையும். வாகன வசதிக்கு குறைவிருக்காது. இருபத்தேழு வயதுக்குள்ளேயே செல்வ சுகங்களை சேர்த்துவிடுவீர்கள். 34 முதல் 41 வயதுக்குள் சாதனைகள் பல செய்வீர்கள்.
பரணி நட்சத்திரத்தின் ரகசியத் தன்மைகள்
நட்சத்திர தேவதை: சூரியனுக்கும், சாயா தேவிக்கும் பிறந்த தர்மதேவன் - எமன்.
வடிவம்: 3 நட்சத்திரங்களைக் கொண்ட முக்கோண வடிவ நட்சத்திரக் கூட்டம்.
எழுத்துகள்: லீ, லு, லே, லோ.
ஆளும் உறுப்புகள்: தலை, மூளை, கண் பகுதி.
பார்வை: கீழ்நோக்கு.
பாகை: 13.20 - 26.40.
நிறம்: வெண்மை.
இருப்பிடம்: கிராமம்.
கணம்: மனித கணம்.
குணம்: உக்கிரம்.
பறவை: காக்கை.
மிருகம்: ஆண் யானை.
மரம்: பாலில்லாத நெல்லி.
மலர்: கருங்குவளை.
நாடி: மத்திம நாடி.
ஆகுதி: தேன், எள்.
பஞ்சபூதம்: பூமி.
நைவேத்யம்: வெல்ல அப்பம்.
தெய்வம்: ஸ்ரீதுர்கையம்மன்.
அதிர்ஷ்டம் தருபவை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9.
அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், வெள்ளை.
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி.
அதிர்ஷ்ட ரத்தினம்: வைரம்.
அதிர்ஷ்ட உலோகம்: வெள்ளி.
பரணி நட்சத்திர பாதவாரியான பரிகாரங்கள்
பரணி நட்சத்திரம் முதல் பாதம்
பரிகாரம்: திருத்தணி மேற்கே அமைந்திருக்கும் வள்ளிமலையில் இச்சா சக்தி வடிவான ஸ்ரீ வள்ளியம்மையையும் ஸ்ரீ முருகப் பெருமானையும் நட்சத்திர நாளில் சென்று வணங்குதல் நலம்.
பரணி நட்சத்திரம் இரண்டாம் பாதம்
பரிகாரம்: சென்னைக்கு அருகிலுள்ள திருவள்ளூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீகனகவல்லித் தாயார் சமேத ஸ்ரீவீரராகவப் பெருமாளை அமாவாசை திதியில் சென்று வணங்குதல் நலம்.
பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதம்
பரிகாரம்: மதுரைக்கு அருகிலுள்ள அழகர் கோயிலில் வீற்றிருக்கும் ஸ்ரீஅழகர் பெருமாளையும், ஸ்ரீசுதர்சன மூர்த்தியையும் சென்று தரிசிப்பது நல்லது.
பரணி நட்சத்திரம் நான்காம் பாதம்
பரிகாரம்: சென்னைக்கு அருகிலுள்ள திருப்போரூரில் வீற்றிருக்கும் அருள்மிகு சுயம்பு முருகப் பெருமானையும், ஸ்ரீசிதம்பர சுவாமிகளையும் வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.