பரிவர்த்தினி ஏகாதசி அன்று பெருமாளின் வாமன அவதாரத்தை வழிபடுவதன் மகத்துவமும், குரு அருளைப் பெறும் வழிகளும்!
வாமன அவதாரத்தின் பின்னணி
பரிவர்த்தினி ஏகாதசியில் மகாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மகாபலியின் அகந்தையை அடக்கி, தேவர்களைக் காக்க பெருமாள் எடுத்த அவதாரமே வாமன அவதாரம். ஜோதிட ரீதியாக குரு பகவானின் அருளைப் பெற இந்த வழிபாடு உதவுகிறது.
பிரகலாதனனின் பேரன் மகாபலி, இந்திர பதவியை அடைய 100 அசுவமேத யாகங்களை செய்யத் தொடங்கினான். இதனால் தேவலோகம் அவனின் வசமாகிவிடும் என்பதால் தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் சரண் அடைந்தனர். மகாபலி தன் குருவான சுக்கிராச்சாரியாரின் முழு அருளையும் பெற்றிருந்தான். மகாவிஷ்ணு அவனைக் குருவின் சாபத்தால் மட்டுமே வெல்ல முடியும் என்று கூறினார்.
தேவர்களின் தாயான அதிதி, காஷ்யப முனிவரின் உபதேசப்படி பயோவிரதத்தை சிரத்தையுடன் மேற்கொண்டாள். அவளின் தவத்துக்கு மகிழ்ந்த விஷ்ணு, ஆவணி மாத வளர்பிறை துவாதசி திதியில் குள்ளமான பாலகனாகக் காட்சியளித்தார். இதுவே வாமன அவதாரம் எனப் போற்றப்படுகிறது. மகாவிஷ்ணு முதன்முதலில் முழு மனித வடிவில் தோன்றியதும் இந்த அவதாரத்தில்தான். 'வாமனன்' என்றால் 'குள்ளமானவர்' மற்றும் 'அழகானவர்' என்று பொருள்.
வாமனர் கேட்ட தானமும் மகாபலியின் வீழ்ச்சியும்
ஒளிவீசும் முகத்துடன் திகழ்ந்த வாமனர், பிரம்மச்சாரியின் கோலம் கொண்டு மகாபலியின் யாக சாலைக்குச் சென்றார். அங்கே தானம் கொடுத்துக்கொண்டிருந்த மகாபலியிடம், "மூன்று அடி நிலம் வேண்டும்" என்று கேட்டார். மகாபலியின் குருவான சுக்கிராச்சாரியார் வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை அறிந்து, அந்த வரத்தைத் தர வேண்டாம் என்று தடுத்தார். ஆனால், மகாபலியோ குருவின் பேச்சைப் பொருட்படுத்தாமல், தானம் கேட்டவருக்கு இல்லை என்று சொல்ல இயலாது எனக் கூறி, வாமனருக்கு நிலம் தருவதாக வாக்களித்தான்.
மகாவிஷ்ணு முதல் அடியால் உலகையும், இரண்டாம் அடியால் வானையும் அளந்தார். மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்று கேட்டபோது, மகாபலி தன் தலை மீதுவைக்குமாறு பணிந்தான். இவ்வாறு மகாவிஷ்ணு, மகாபலிக்கு அனுக்கிரகம் செய்து பாதாள லோகம் செல்லும்படி அருள்புரிந்தார். இந்த அவதாரத்தில் மகாவிஷ்ணு சம்ஹாரம் செய்யாமல் அருள் பாலித்ததே இதன் சிறப்பு.
குரு அருளைப் பெற வாமன வழிபாடு
தசாவதாரங்களுள் வாமன அவதாரம் குருவுக்கு உகந்த அவதாரம் என்று கூறப்படுகிறது. 'தான்' என்னும் அகந்தையை நீக்கி நல்லருள் பெற குரு பகவான் வழிகாட்டுகிறார். தன் குருவின் சொல்லைக் கேட்காததாலேயே மகாபலி வீழ்ந்தான். எனவே, வாமன அவதாரம் நவகிரகங்களுள் குருவின் மகிமை நிறைந்த அவதாரம் ஆகும்.
கலியுகத்தில் பரந்தாமனின் திருவடியைப் பற்றிக்கொள்ளும் பக்தர்களுக்கு, வாமன ரூபமாகவும் உலகளந்த பெருமாளாகவும் வணங்கினால், குரு பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இது வாழ்க்கையில் உள்ள தடைகளை நீக்கி சுபீட்சத்தைத் தரும்.