கலியுகத்தின் கண் கண்ட கடவுளாக பக்தர்களால் போற்றப்படும், தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்குரிய மிக முக்கியமான விரதங்களில் ஒன்று தைப்பூச விரதம். தை மாதத்தில் வரும் பெளர்ணமியும், பூசம் நட்சத்திரமும் இணைந்த வரும் நாளையே தைப்பூச திருநாளாக கொண்டாடுகிறோம். இந்த தைப்பூச திருநாள் முருகன் அருளைப் பெறவும், வாழ்க்கையில் நன்மைகளைப் பெறவும் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. ஜோதிட ரீதியாகவும் இந்த விரதம் சிறப்பு வாய்ந்தது.
தைப்பூச விரதத்தின் முக்கியத்துவம்
முருகப்பெருமான் அசுரர்களை வென்ற நாள் மற்றும் பழனி மலையில் ஞானப்பழம் கிடைக்காமல் கோபித்து இருந்ததை நினைவூட்டும் விதமாக தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது. காவடி எடுக்கும் வழக்கம் மற்றும் பழனி மலை தோன்றிய தினமும் இந்த தைப்பூச திருநாளில் தான் புராணங்கள் கூறுகின்றன. தைப்பூச தினத்தில் முருகப்பெருமானை வேண்டி விரதம் இருந்தால் வறுமை நீங்கி செல்வம் பெருகும், தீமைகள் அழியும், தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். காவடி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை நிறைவேற்றவும் இது உகந்த நாள்.
முருகனுக்குரிய மகா கந்தசஷ்டி விரதம் போலவே, தைப்பூச விரதமும் 48 நாட்கள் கடைபிடிக்கும் வழக்கம் உண்டு. பக்தர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப 48 நாட்கள், 21 நாட்கள், 7 நாட்கள் அல்லது ஒரு நாள் என விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுவார்கள். 2026 ஆம் ஆண்டில் தைப்பூச விழா பிப்ரவரி 01 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது.
2026 தைப்பூச விரதம் துவங்கும் நாட்கள்
முருகப்பெருமானின் அருளால் துன்பங்களில் இருந்து விடுபட நினைப்பவர்கள், கீழே உள்ள நாட்களில் விரதத்தைத் துவங்கலாம்:
- 48 நாள் விரதம்: டிசம்பர் 15, 2025 (திங்கட்கிழமை)
- 21 நாள் விரதம்: ஜனவரி 11, 2026 (ஞாயிற்றுக்கிழமை)
- 7 நாள் விரதம்: ஜனவரி 25, 2026 (ஞாயிற்றுக்கிழமை)
தைப்பூச விரதத்தின்போது செய்ய வேண்டியவை
- பகலில் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டோ அல்லது ஒரு வேளை மட்டும் சாப்பிடாமலோ விரதம் இருக்கலாம். முடியாதவர்கள் பால், பழம் அல்லது சைவ உணவுகளை மட்டும் உட்கொண்டு விரதம் இருக்க வேண்டும்.
- விரதத்தின்போது பகலில் தூங்கக் கூடாது.
- விரதத்தின்போது மனதை தூய்மையாக வைத்திருப்பது மிகவும் அவசியம்.
- அருகிலுள்ள முருகன் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது, முருகனின் பெருமைகளை படிப்பது, கேட்பது அல்லது மற்றவர்களுக்குச் சொல்வது சிறப்பு. தமிழ்நாட்டில் உள்ள ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவது மிகுந்த புண்ணியத்தை தரும்.
- முருகன் சிந்தனையிலேயே இருந்து, அவருக்குரிய மந்திரங்களை (ஓம் சரவணபவ) மனதிற்குள் சொல்லியபடியே இருப்பது இன்னும் அதிக பலன்களைத் தரும்.