சிவபெருமானின் அருளைப் பெற்று, சனி பகவானால் ஏற்படும் தோஷங்களிலிருந்து விடுபட உதவும் சனிப் பிரதோஷ விரதத்தின் மகத்துவத்தையும், அதை அனுஷ்டிக்கும் முறைகளையும் இக்கட்டுரையில் காண்போம். ஜோதிட ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் இந்த சிறப்பு மிக்க பிரதோஷம் தரும் பலன்கள் அளப்பரியது.
பிரதோஷ விரதத்தின் சிறப்பு
சிவ பெருமானுக்குரிய எட்டு வகையான விரதங்களில் பிரதோஷ விரதம் மிக முக்கியமானது. ஒவ்வொரு மாதமும் இரண்டு பிரதோஷங்கள் வரும். இவற்றில் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம், சனிப் பிரதோஷம் அல்லது சனி மகா பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சனிப்பிரதோஷமானது மற்ற பிரதோஷங்களை விடவும் மிகவும் சக்தி வாய்ந்தது.
சனிப் பிரதோஷ நாளில் நந்தியை வணங்கி, சிவனை வழிபட்டால், சனி பகவானால் ஏற்படும் சகல துன்பங்களும், ஏழரை சனி, அஷ்டம சனி போன்ற தோஷங்களும் விலகும். கிரக தோசத்தால் ஏற்படும் தீமைகள் குறைந்து, பஞ்சமா பாவங்களும் நீங்கி சிவன் அருள் கிடைக்கும்.
சனிப்பிரதோஷத்தின் மகத்தான பலன்கள்
- சனி மகாபிரதோஷ நாளில் நாம் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப் பலனைத் தரும்.
- சாதாரண பிரதோஷ நேரத்தில் சோம சூக்த பிரதட்சணம் செய்வதால், ஒரு வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.
- சனிப் பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால் 120 வருட பிரதோஷ சென்ற பலன் கிடைக்கும். இது ஜோதிட ரீதியாக மிகவும் நன்மை தரும்.
- சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாதலால், அன்று வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும்.
- உடல்நலம் மேம்படும், வாயுக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். உடல் நிலை, மனநிலை சீராகும், மன அழுத்தம் குறையும்.
பிரதோஷ காலம் மற்றும் வகைகள்
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி திதி தினங்களில் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. அன்று தான் ஈசன் விஷம் உண்ட மயக்கம் தெளிந்து அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகின்றன.
நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக தமிழ் புராணங்கள் கூறுகின்றன.
சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களின் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் என்று சொல்லப்படுகிறது. இதே மாதங்களில் தேய்பிறை சனிக்கிழமை பிரதோஷம் வருவது மகா சனி பிரதோஷம் ஆகும். மாசி மாதத்தில் மகா சிவராத்திரி காலத்தில் சனிப்பிரதோஷம் வருவதும் மகா சனி பிரதோஷம் ஆகும்.
சனிப்பிரதோஷ விரதம் இருக்கும் முறை
திரயோதசி நாள் முழுக்க உண்ணாமல் இருந்து, நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை கூறியபடி, பிரதோஷ காலத்தில் சிவபெருமானோடு தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க வழிபட்டால் சகல வித நன்மைகளும் வந்து சேரும். சிவன் மற்றும் முருகன் ஆலயங்களில் இந்த வழிபாடு சிறப்புற நடைபெறுகிறது.