கார்த்திகை மாதம் தொடங்கிவிட்ட நிலையில், ஐயப்ப பக்தர்கள் சபரிமலை யாத்திரைக்கான மண்டல விரதத்தை துவங்கியுள்ளனர். கன்னி சாமியாக இருந்தாலும் அல்லது பலமுறை சபரிமலைக்கு சென்றுள்ள பக்தர்களாக இருந்தாலும், ஐயப்பன் கோவில் வழிபாடுகள் மற்றும் முக்கிய சடங்குகள் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். இந்த வழிகாட்டியில், சபரிமலை யாத்திரையின் முக்கிய அம்சங்களையும், அதன் பின்னணியில் உள்ள ஆன்மீக தத்துவங்களையும் விரிவாகக் காணலாம்.
சபரிமலை ஐயப்பன் கோவில் வழிபாடுகள் மற்றும் முக்கிய விஷயங்கள்
ஐயப்பன் படையில் சேனாதிபதியாக இருந்த கடுத்த சுவாமி (கருப்பசாமி) பதினெட்டு படிக்கு அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முந்திரி மற்றும் திராட்சை படைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகி நன்மை உண்டாகும்.
சபரிமலை ஐயப்பனுக்கு மாலை நேரத்தில் அர்ச்சனை செய்வார்கள். அர்ச்சனை சீட்டு பின்பக்கத்தில் உங்கள் ராசி, நட்சத்திரத்தை ஆங்கிலத்தில் எழுதி கொடுத்தால் அர்ச்சனை செய்து தருவார்கள்.
சபரிமலையில் பக்தர்கள் கொடுக்கும் பொருட்கள், சன்னிதானம் அருகே வாரம் இருமுறை ஏலம் விடப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் ஏலம் எடுக்கலாம்.
நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று அகந்தைகளையும் விரட்டவே சபரிமலை பதினெட்டாம் படியில் மூன்று கண்களை உடைய தேங்காயை உடைத்த பிறகு பதினெட்டு படியில் ஏறி செல்கிறார்கள்.
சபரிமலையில் தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் திறந்ததும் சுப்ரபாதம் பாடப்படும். ஐயப்பனுக்கு தினமும் இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்படும். பக்தர்களே பூக்களை கூடையில் எடுத்து வந்து கொடுக்கலாம்.
ஐயப்பனுக்கு விபூதி, சந்தனம், பால், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் இளநீர் ஆகியவற்றுடன் 108 ஒரு ரூபாய் நாணயம் என எட்டும் கொண்டு செய்யப்படும் அபிஷேகத்திற்கு அஷ்டாபிஷேகம் என்று பெயர்.
ஐயப்பன் சிவனின் உடுக்கையை படுக்க வைத்த நிலையில் உள்ள பீடத்தில், சிவனைப் போல் தியான கோலத்திலும் (முக்தி தருவது), விஷ்ணுவை போல் விழித்த நிலையிலும் (காத்தல் தொழில்) அருள்பாலிப்பது மிகவும் விசேஷமாகும்.
சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர சங்கராந்தி அன்று தோன்றும் ஜோதியை அப்பாச்சிமேடு, பம்பை, பெரியானை வட்டம் மற்றும் புல்மேடு ஆகிய இடங்களில் இருந்தும் காணலாம். புல்மேடு பகுதியில் தான் இந்த ஜோதி நன்றாக தெரியும்.
சபரிமலை ஐயப்பன் உற்சவர் ஆண்டுக்கு ஒரு தடவை பம்பை ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டு ஆராட்டு உற்சவம் நடைபெறும். பிறகு ஐயப்பனை அலங்கரித்து பம்பா விநாயகர் கோவில் முன்பு மக்கள் தரிசனத்திற்காக 3 மணி நேரம் வைப்பார்கள். சபரிமலை வர இயலாதவர்கள் இந்த சமயத்தில் ஐயப்ப உற்சவரை தரிசிக்கலாம்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 'தத்துவமசி" எனும் தத்துவம் எழுதப்பட்டுள்ளது. தத்துவமசி என்றால், 'நீ எதை நாடி வந்தாயோ, அது நீயாக உள்ளாய்" என்று பொருள்.
சபரிமலை செல்லும் வழியில் ஒரு பள்ளி வாசல் உள்ளது. பக்தர்கள் இங்கு சென்று தங்கள் விரதத்தையும், பிரம்மச்சரியத்தையும் முழுமையாக கடைபிடித்தோம் என்று உறுதி செய்துவிட்டுதான் சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.
பந்தளத்தில் இருந்து சபரிமலை வரை ஐயப்பனின் ஆபரண பெட்டியை சுமந்து வர 15 சங்கங்கள் உள்ளன.
வாழும் காலத்தில் நல்லவனாய் வாழ்ந்து விட்டால் மீண்டும் இந்த பிறவி பெருங்கடலை நீந்த வேண்டாம் என்ற அரிய தத்துவங்களை உணர்த்தும் தலம் சபரிமலை.
சபரிமலை ஐயப்பன் யாத்திரையின் முக்கிய அம்சங்கள்
- மண்டல விரதம்: கார்த்திகை மாதம் துவங்கும் புனிதமான 41 நாட்கள் விரதம்.
- கடுத்த சுவாமி வழிபாடு: பதினெட்டு படிக்கு அருகில் இருக்கும் கடுத்த சுவாமிக்கு முந்திரி, திராட்சை படைத்து வழிபடுதல் தோஷங்களை நீக்கும்.
- பதினெட்டு படிகளின் தத்துவம்: ஆணவம், கன்மம், மாயை ஆகிய அகந்தைகளை நீக்கும் குறியீடு.
- அஷ்டாபிஷேகம்: ஐயப்பனுக்கு விபூதி, சந்தனம், பால், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் மற்றும் 108 நாணயங்களுடன் செய்யப்படும் சிறப்பு அபிஷேகம்.
- தத்துவமசி: "நீ எதை நாடி வந்தாயோ, அது நீயாக உள்ளாய்" என்ற ஐயப்பனின் மகத்தான தத்துவம்.
- மகர ஜோதி தரிசனம்: பொன்னம்பல மேட்டில் தோன்றும் புனிதமான மகர ஜோதியை புல்மேடு போன்ற இடங்களில் இருந்து தரிசிக்கலாம்.