Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

ராமேஸ்வரம் அமாவாசை நீராடல்: அக்னி தீர்த்தம் மற்றும் பித்ரு தோஷம் நீக்கும் பலன்கள்

அமாவாசை தினங்களில் ராமேஸ்வரத்தில் புனித நீராடுவது ஏன் சிறப்புமிக்கது என்பதைப் பற்றி பல புராண கதைகள் உள்ளன. ராமேஸ்வரத்தில் நீராடினால் எப்படிப்பட்ட பாவமும் நீங்கும் என்பதுடன், பித்ரு தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். இந்த கட்டுரையில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலின் மகிமை மற்றும் அமாவாசை வழிபாடுகளின் முக்கியத்துவத்தை ஜோதிடம்360 மூலம் அறிந்துகொள்ளுங்கள்.

ராமேஸ்வரத்தில் நீராடுவதன் முக்கியத்துவம்

இந்தியாவில் உள்ள மிக முக்கியமான புனித தலங்களில் ஒன்றாகவும், மோட்ச தலங்களில் ஒன்றாகவும் ராமேஸ்வரம் கருதப்படுகிறது. காசிக்குச் சென்று கங்கையில் நீராடி, காசி விஸ்வநாதரை வழிபட்டாலும், ராமேஸ்வரம் சென்று கடலிலும், அங்குள்ள தீர்த்தங்களிலும், தனுஷ்கோடியிலும் நீராடினால்தான் காசி யாத்திரை சென்ற முழு பலனையும் பெற முடியும் என்கிறார்கள். குறிப்பாக, அமாவாசை நாளில் அதிகமானவர்கள் ராமேஸ்வரம் வந்து கடலில் புனித நீராடுவார்கள். ஆடி அமாவாசையில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்த அமாவாசை நீராடலின் பின்னணியில் உள்ள காரணங்களையும், பித்ரு தோஷம் நீங்குவதற்கான வழிபாடுகளையும் காண்போம்.

அக்னி தீர்த்த கடலின் சிறப்பு மற்றும் புராணம்

கடலை ஏன் அக்னி தீர்த்தம் என அழைக்கிறார்கள் என்பதற்கு ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது. ஆடி அமாவாசை, அக்னி தேவனே நீராடிய தினம் என்பது நம்பிக்கை. ராமபிரான், சீதையை தீக்குளிக்க ஆணையிட்டபோது, சீதாதேவியின் கற்புக்கனல் அக்னிதேவனைச் சுட்டெரித்தது. சூடு தாங்காத அக்னி, ராமேஸ்வரக் கடலில் குதித்து தன் சூட்டைத் தணித்துக்கொண்டான். அதனால் கடல் நீர் சூடேறியது, அக்னி தீர்த்தம் எனப் பெயர் வந்தது. அக்னி நீராடிய கடலில் நீராடுவோரின் பாவங்கள் தீரும் என சீதாதேவி ஆசி வழங்கினாள். இன்னும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ஆலயத்தின் முன் உள்ள கடல் நீரில் அலையே இருக்காது. சீதாதேவி போல அமைதியான இக்கடலில் நீராடுவது சிறப்பு. அதிலும் ஆடி அமாவாசை அன்று இங்கு நீராடுவதும், நீத்தார் கடன்களைச் செய்வதும் விசேஷமானது.

தீர்த்தம் அதிகமுள்ள திருத்தலம் ராமேஸ்வரம்

ராவணனைக் கொன்ற பாவம் தீர ராமபிரான், லிங்கத்தை பிரதிஷ்டை செய்து, சிவபெருமானை வழிபட்ட திருத்தலம் ராமேஸ்வரம். இலங்கைக்குச் செல்ல பாலம் அமைத்ததால் இத்தலத்திற்கு சேதுக்கரை என்று பெயர் இருந்தது. சிவபெருமானின் பன்னிரு ஜோதிர்லிங்க தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே தலம் இது மட்டுமே. இங்கு மொத்தமுள்ள 64 தீர்த்தங்களில் 22 தீர்த்தங்கள் கோயிலுக்குள் உள்ளன. மற்ற தீர்த்தங்கள் ராமேஸ்வரத்தைச் சுற்றி 10 கி.மீ., தூரத்திலும் அமைந்துள்ளன. வேறெந்த தீர்த்த தலத்திற்கு சென்று குளிக்கவிட்டாலும், ராமேஸ்வரம் சென்று புனித நீராடல் அவசியம் எனச் சொல்லப்படுகிறது. 64 தீர்த்தங்களிலும் நீராட முடியாவிட்டாலும் அக்னி தீர்த்த கடலிலும், கோயிலுக்குள் இருக்கும் 22 தீர்த்தங்களிலும் அவசியம் நீராட வேண்டும்.

ஆடி மாதத்தின் சிறப்பு மற்றும் பித்ரு தோஷம் நீக்கும் வழிபாடுகள்

ராமேஸ்வரத்தில் ஆடி மாதத்தில் பர்வதவர்த்தினி அம்மனுக்கும், ராமநாதருக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறுகிறது. ஆடி அமாவாசை நாள் மட்டுமல்ல, தீர்த்த நீராடலுக்கு பெயர் பெற்ற ஆடி மாதம் முழுவதும் இங்கு நீராடுவது சிறப்பானதாகும். பாவ நிவர்த்தி மட்டும் அல்லாமல், பிதுர்தோஷம் நீக்கும் புனிதத்தலமாக இருப்பதால் ஆடி அமாவாசையும் இங்கு சிறப்பு. இங்குள்ள கடலில் நீராடி, கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அவர்களின் ஆத்மா சாந்தி அடைந்து, மோட்சம் பெறும் என்பதும், அதோடு நம்மை பிடித்து இருக்கும் பித்ருதோஷம், பித்ரு சாபம், பாவங்கள் ஆகியவையும் நீங்கும் என்பது ஐதீகம்.

ஆடி அமாவாசையில் செய்ய வேண்டியது:

  • தர்ப்பணம்: தட்சிணாயண காலத்தில் வரும் ஆடி அமாவாசை, முன்னோருக்கு முக்கியமான நாள். காலையே துவங்கி, ஏதாவது ஒரு தீர்த்தங்கரைக்குச் சென்று, தர்ப்பணம் செய்து வர வேண்டும்.
  • உணவு படைத்தல்: மதியம் சமையல் முடிந்ததும், மறைந்த முன்னோர் படங்களுக்கு மாலையிட்டு, திருவிளக்கேற்ற வேண்டும். ஒரு இலையில், அவர்கள் வாழ்ந்த காலத்தில் விரும்பி சாப்பிட்ட உணவு வகைகளைப் படைக்க வேண்டும்.
  • காகத்திற்கு உணவிடுதல்: படங்களுக்கு தீபாராதனை செய்த பிறகு, காகத்திற்கு உணவிட வேண்டும். இது முன்னோர் ஆசியைப் பெற்றுத்தரும்.
  • குடும்ப உணவு: இலையில் படைத்த படையலை வீட்டில் மூத்தவர் சாப்பிட வேண்டும்; அவர் சாப்பிட்டதும் மற்றவர்கள் சாப்பிடலாம். இவ்வாறு செய்வதால், முன்னோர் மகிழ்ந்து, நம்மை ஆசிர்வாதம் செய்வதாக ஐதீகம்.

அமாவாசையின் முக்கியத்துவம் - மகாபாரத கதை

அமாவாசையின் முக்கியத்துவம் பற்றி விளக்க மகாபாரதத்தில் ஒரு சம்பவம் குறிப்பிடப்படுவது உண்டு. குருஷேத்ர யுத்தத்திற்கு முன், வெற்றி வாய்ப்பு குறித்து அறிவதற்காக, ஜோதிட கலையில் தலை சிறந்தவனான சகாதேவனிடம் துரியோதனன் ஜோதிடம் கேட்கச் சென்றான். சகாதேவன் பூரண அமாவாசை அன்று போரைத் துவங்கினால் வெற்றி உறுதி என்றார். இதை அறிந்த கிருஷ்ணர் தந்திரமாக, அமாவாசைக்கு முதல் நாளே தர்ப்பணம் செய்தார். இதைப் பார்த்த சூரியனும், சந்திரனும் ஒன்றுகூடி வந்தனர். கிருஷ்ணர் சமயோசிதமாக, "நீங்கள் இருவரும் ஒன்றாகத் தானே வந்திருக்கிறீர்கள்; எனவே, இன்று தான் அமாவாசை" எனப் பதிலளித்தார். இதனால் துரியோதனன் கொடுத்த களபலி அமாவாசை இல்லாத நாளில் நிகழ, நல்லவர்களான பாண்டவர்களுக்கே வெற்றி கிடைத்தது.

நித்ய அமாவாசை தலம்: செதலபதி முக்தீஸ்வரர் கோவில்

ஆடி அமாவாசையன்று மட்டுமல்ல, தினமும் தர்ப்பணம் செய்ய ஏற்ற தலம் திருவாரூர் மாவட்டம் செதலபதி முக்தீஸ்வரர் கோவில். முக்தீஸ்வரரை சூரியன், சந்திரன் இருவரும் ஒரே நேரத்தில் வணங்கியுள்ளனர். எனவே, இவர்கள் இருவரும் அருகருகே இருக்கின்றனர். சூரியன், சந்திரன் சந்திக்கும் நாளே அமாவாசை. இங்கே தினமும் இருவரும் இணைந்திருப்பதால், இதை நித்ய அமாவாசை தலம் என்பர். இக்கோவிலில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் எனப் பார்க்கத் தேவையில்லை. எந்த நாளிலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்து கொள்ளலாம். இது தமிழ் நாட்டிலுள்ள முக்கிய வழிபாட்டு தலங்களில் ஒன்று.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

சீதாதேவியின் கற்புக்கனல் சுட்டெரித்ததால் சூடு தாங்காத அக்னிதேவன் ராமேஸ்வரக் கடலில் குதித்து தன் சூட்டைத் தணித்துக்கொண்டான். அக்னி நீராடியதால் இது அக்னி தீர்த்தம் எனப் பெயர் பெற்றது. இங்கு நீராடுவோரின் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.

ஆடி அமாவாசை அன்று அக்னி தீர்த்த கடலில் நீராடி, கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதால் பித்ரு தோஷம் நீங்கி, பாவங்கள் கரைந்து, அவர்களின் ஆத்மா சாந்தி பெறும் என்பது ஐதீகம். இது மோட்சம் தரும் வழிபாடாக கருதப்படுகிறது.

ராமேஸ்வரத்தில் மொத்தம் 64 தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் 22 தீர்த்தங்கள் கோயிலுக்குள்ளேயே அமைந்துள்ளன. அக்னி தீர்த்தம் மற்றும் இந்த 22 தீர்த்தங்களிலும் நீராடுவது மிகவும் முக்கியம்.

திருவாரூர் மாவட்டம் செதலபதி முக்தீஸ்வரர் கோவில் "நித்ய அமாவாசை தலம்" என்று அழைக்கப்படுகிறது. இங்கு சூரியன், சந்திரன் இருவரும் இணைந்து அருள்புரிவதால், எந்த நாளிலும் பிதுர் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்யலாம்.

Our Other Services