புரட்டாசி மாதம், பெருமாள் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் பெருமாளை வழிபடுவதன் மூலம் நம் துன்பங்கள் நீங்கி, நன்மைகள் பெருகும் என்பது ஐதீகம். புரட்டாசி மாத வழிபாட்டினை எப்படி தொடங்கி, பெருமாளின் அருளை முழுமையாகப் பெறுவது என்பதை இந்த கட்டுரையில் விரிவாகக் காணலாம்.
புரட்டாசியில் பெருமாள் வழிபாடு ஏன்?
மார்கழிக்கு அடுத்தபடியாக பெருமாள் வழிபாட்டிற்கு மிகவும் சிறப்புக்குரிய மாதமாக புரட்டாசி மாதம் கருதப்படுகிறது. தமிழ் மாதங்களில் ஆறாவது மாதமான புரட்டாசி, புதன் பகவானின் ஆதிக்கம் நிறைந்த மாதமாகும். புதனுக்குரிய அதிபதியான பெருமாளை புரட்டாசி மாதத்தில் வழிபடுவதால், துன்பங்கள், பாவங்கள் நீங்கி நன்மைகளும், புண்ணியங்களும் அதிகம் பெறலாம். பெருமாள் அனைத்து நலன்களையும் நமக்கு அருள்வார் என சொல்லப்படுகிறது.
புரட்டாசி 2025 சிறப்புகள்
இந்த ஆண்டு புரட்டாசி மாதம் செப்டம்பர் 17ம் தேதியன்று பிறக்கிறது. இது மிகவும் சிறப்பானதாகும், ஏனெனில் பெருமாளுக்குரிய புரட்டாசி மாதம், பெருமாள் வழிபாட்டிற்குரிய புதன்கிழமை மற்றும் ஏகாதசி திதி இணைந்து வரும் நாளில் பிறக்கிறது. இது கூடுதல் சிறப்புடையதாகும். புரட்டாசியின் முதல் நாள் வழிபாடே மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது. இந்த மூன்று சிறப்புகளும் இணைந்து வரும் நாளில் பெருமாளை வழிபடுவது மூன்று மடங்கு பலனை தரக்கூடியதாகும். பெருமாளின் அருளை பெற விரும்புபவர்கள், முதல் நாளில் விரதத்தை எப்படி துவக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்ளலாம்.
புரட்டாசி வழிபாட்டை துவக்கும் முறை
புரட்டாசி மாத வழிபாட்டினை துவக்குவதற்கு முந்தைய நாள் (செவ்வாய்கிழமை) வீட்டை சுத்தம் செய்ய முடியாவிட்டால், திங்கட்கிழமையே சுத்தம் செய்து தயாராக இருக்கலாம். அல்லது புதன்கிழமை காலையிலேயே வீட்டை சுத்தம் செய்து, வீட்டில் உள்ள பெருமாள் படத்தை துடைத்து, துளசி மாலை அணிவித்து, சந்தனம் குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும். பெருமாளுக்கு நைவேத்தியமாக வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, கற்கண்டு, பால், துளசி தீர்த்தம் ஆகியவற்றை படைத்து எளிமையாக வழிபடலாம். முடிந்தவர்கள் பானகம், சுண்டல், வடை, சர்க்கரை பொங்கல் போன்றவைகளையும் படைத்து வழிபடலாம்.
என்ன மந்திரம் சொல்ல வேண்டும்?
புரட்டாசி மாதத்தின் முதல் நாளில் பெருமாளுக்கு உகந்த "ஓம் நமோ நாராயணாய நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபடலாம். பெருமாளுக்குரிய வேறு மந்திரங்கள் தெரிந்தவர்கள் அதையும் சொல்லலாம். விஷ்ணு சகஸ்ரநாமம் படிக்கலாம் அல்லது பெருமாளுக்கு பிரியமான நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள், நாராயணீயம் உள்ளிட்ட மந்திரங்களை சொல்லலாம். எதுவும் தெரியாதவர்கள் எளிமையாக நாராயண மந்திரத்தையும், ராம நாமத்தையும் மட்டும் கூட சொல்லி வழிபடலாம். தீப, தூப ஆராதனை காட்டி, புரட்டாசி மாதத்தில் பெருமாளின் அருளுடன், மகாலட்சுமியின் அருளும் சேர்ந்து கிடைக்க வேண்டும் என வேண்டி வழிபட வேண்டும்.
புரட்டாசி மாத வழிபாட்டை துவக்குவதற்கான நேரம்
புரட்டாசி மாதம் இந்த ஆண்டு வேலை நாளான புதன்கிழமையில் துவங்குவதால் முடிந்தவர்கள் காலையிலேயே வழிபாடு செய்து, விரதத்தை துவக்கி விடலாம். முடியாதவர்கள் மாலையில் கூட பெருமாள் வழிபாட்டினை செய்து கொள்ளலாம்.
வழிபாடு துவங்குவதற்கான உகந்த நேரம்:
- காலை 6 மணி முதல் 07.20 வரை
- காலை 09.10 முதல் 10.20 வரை
- மாலை 6 மணிக்கு மேல்
தளிகை இடுவதற்கான உகந்த நேரம்:
பகல் 12.30 முதல் 01.20 வரை