துளசி செடி என்பது வெறும் செடி மட்டுமல்ல, அது தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும், பல ஆன்மீக மற்றும் ஆரோக்கிய பலன்களைக் கொண்டதாகவும் கருதப்படுகிறது. மகாவிஷ்ணுவுக்கும் மகாலட்சுமிக்கும் உகந்த இந்த துளசி செடியை வழிபடுவதன் மூலம் வாழ்வில் சகல செளபாக்கியங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை. துளசி குறித்த 25 வியத்தகு உண்மைகளை இங்கு காணலாம்.
துளசி மகிமையின் 25 உண்மைகள்
- துளசி வணங்கும் மந்திரம்
துளசி செடியை வணங்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்: "அநாதி மத்ய நிதனத்ரைலோக்ய ப்ரதிபா இமாம் க்ருஹான துளஸிம் விவாஹ விதி நேச்வர பயோக்ருதைஸ்ச ஸேவாபி கன்யாவத் வந்திதாம் மயா த்வத் ப்ரியாம் துளஸிம் துப்யம் தாஸ்யாமித்வம் க்ருஹாணபோ'"
- பிருந்தாவன துவாதசியின் சிறப்பு
ஐப்பசி மாத வளர்பிறை துவாதசி திதி அன்று துளசியை மகாவிஷ்ணு திருமணம் செய்து கொண்டதால் இதற்கு "பிருந்தாவன துவாதசி" என்று பெயர். இந்த நாளில் மகாவிஷ்ணு தியானத்திலிருந்து எழுப்புவதாக ஐதீகம்.
- துளசி பூஜை செய்யும் முறை
துவாதசியன்று காலையில் துளசி மாடத்தைச் சுற்றி தூய்மை செய்து மெழுகிக் கோலமிட்டு காவி இடவேண்டும். துளசிச் செடிக்கு பஞ்சினாலான மாலையும், வஸ்திரமும் அணிவித்து, கருகமணி, நகைகள் அணிவித்து அலங்காரம் செய்யலாம். வெற்றிலை, பாக்கு, பழங்கள், மஞ்சள், மணமுள்ள மலர்கள், தேங்காய் படைத்து, குத்துவிளக்குகள் ஏற்றி வைத்து சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யலாம்.
- நெல்லி மரத்துடன் துளசி வழிபாடு
மகாவிஷ்ணு நெல்லி மரமாகத் தோன்றினார் என்பதால், ஒரு சிறிய நெல்லிக்கொம்பை துளசி மாடத்தில் வைத்து, இரண்டுக்கும் பூஜை செய்ய வேண்டும்.
- துளசி பெயரின் அர்த்தமும் பலன்களும்
துளசி என்ற சொல்லுக்கு "தன்னிகரற்றது" என்று பொருள். துளசி பூஜை செய்வதால் எட்டு வகை செல்வங்களும் கிட்டும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும். சுமங்கலிகள் சுகமுடன் நீடூழி வாழ்வர்.
- மகாலட்சுமி சொரூப துளசி
துளசி தளம் திருமாலுக்கும் திருமகளுக்கும் உகந்தது. மகாலட்சுமி சொரூபமானது. துளசி இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணு வாசம் செய்வார். அதனால் துளசிக்கு "விஷ்ணுப்ரியா, ஹரிப்ரியா" என்ற பெயர்களும் உண்டு.
- பிருந்தை துளசியாக மாறிய கதை
மகாவிஷ்ணுவை மணாளனாக அடைவதற்காக பிருந்தை என்ற பெண் தவமிருந்தாள். அதன் பலனாக ஜலந்திரன் என்ற அசுரனை மணந்தாள். பிறகு தீக்குளித்து மாண்டதால் பிருந்தா என்ற துளசியாக மாறினாள். அதன்பின் அவளை மகாவிஷ்ணு மணந்தார்.
- சாளக்கிராமத்தோடு துளசி பூஜை
செடியாய்ப் பிறந்த துளசியை சாளக்கிராமத்தோடு (கிருஷ்ணனோடு) சேர்த்து பூஜிப்பது விஷேசம்.
- கிருஷ்ணர் - துளசி தராசு கதை
கிருஷ்ணனை விட்டு பிரியாமல் இருக்க, நாரதர் யோசனைப்படி சத்தியபாமாவும் நவரத்தினங்களையும் தங்கத்தையும் எடைக்கு வைத்த போதும், ருக்மிணி தேவி துளசி தளத்தைக் கொண்டு வந்து தராசின் இரண்டாவது தட்டில் வைத்தவுடன் இரண்டு தட்டுக்களும் நேராயின. துளசியின் மகிமை அனைவருக்கும் புரிந்தது.
- ருக்மிணியாக அவதரித்த துளசி
கிருஷ்ணாவதாரத்தில் துளசிதான் ருக்மணியாக அவதரித்து கிருஷ்ணனை மணந்தாள். துளசி பாற்கடலில் தோன்றியது. துளசி தெய்வீக சக்தி கொண்டது.
- துளசியின் வடமொழிப் பெயர்கள்
துளசிக்கு ஸுலபா, ஸரசா, அம்ருதா, ச்யாமா, வைஷ்ணவி, கௌரி, பகுமஞ்சரி என்று வடமொழிகளில் பல பெயர்கள் உள்ளன.
- ஒன்பது வகையான துளசிச் செடிகள்
கரியமால் துளசி, கருந்துளசி, கற்பூர துளசி, செந்துளசி, காட்டுத்துளசி, சிவதுளசி, நீலத்துளசி, பெருந்துளசி, நாய்த்துளசி என ஒன்பது வகையான துளசிச் செடிகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம் கொண்டவை.
- ஆன்மீகப் பெயர்கள்
ஆன்மிகத்திலும் திருத்துழாய், துளபம், துளவம், சுகந்தா, பிருந்தா, வைஷ்ணவி, லட்சுமி, கவுரி, மாதவி, ஹரிப்ரியா, அம்ருதா, சுரபி எனப் போற்றப்படும் பெருமை உடையது துளசி.
- துளசி இலையில் தெய்வங்கள்
துளசி இலையின் நுனியில் பிரம்மனும், அடியில் சிவனும், மத்தியில் மகாவிஷ்ணுவும் வாசம் செய்கிறார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது.
- துளசிச் செடியில் தெய்வ வாசம்
துளசிச் செடியில் 12 ஆதித்யர்களும், 11 ருத்ரர்களும், எட்டு வசுக்களும், அஸ்வினி தேவர்களும் வசிக்கிறார்கள். எனவே துளசி இலையுடன் கூடிய நீர், கங்கை நீருக்கு சமமாகக் கருதப்படுகிறது.
- துளசி பறிக்கும் முறை
காலையில் நீராடியபின் தெய்வத்தை மனத்தால் வணங்கி துளசியைப் பறிக்க வேண்டும். அப்போது, "துளசி ஸ்யமருத ஜந்மாஸிஸதாத்வம் கேஸவப் பிரியே கேஸவார்தாம் லு நாமித்வாம் வரதாபவ ஸோபதே" என்ற சுலோகத்தை சொல்லிப் பறிக்க வேண்டும். மேலும், நான்கு இலைகளுக்கு நடுவில் தளிரும் இருப்பது போல் (ஐந்து தளங்கள்) துளசியைக் கிள்ளிச் சேகரிக்க வேண்டும்.
- துளசி பறிக்கக்கூடாத நாட்கள்
பௌர்ணமி, அமாவாசை, துவாதசி திதிகளிலும்; ஞாயிற்றுக்கிழமை, மகரசங்கராந்தி, நண்பகல், இரவுப்பொழுது, சூரிய உதயத்திற்கு முன்பும் துளசியைப் பறிக்கக்கூடாது. குளிக்காமலும் துளசி இலையைப் பறிக்கக்கூடாது.
- ஆரோக்கிய மற்றும் பாதுகாப்புப் பலன்கள்
சளித்தொல்லை, விஷக்காய்ச்சலுக்கு நல்ல மருந்து துளசி. துளசிச் செடி வீட்டிலிருந்தால் விஷப்பூச்சிகள், பாம்பு, தேள் போன்றவை வராது. இடி இடிக்கும் போது, இடியின் தாக்கம் வீட்டின் மீது விழாமல் தடுக்கும் சக்தி துளசிக்கு உண்டு.
- துளசி மாடம் அமைக்கும் முறை
வீட்டின் தென்மேற்குப் பகுதியில் சூரிய உதயத்தைப் பார்த்த நிலையில் துளசி செடியை தொட்டியில் வைத்து வழிபட வேண்டும். துளசி மாடத்திற்கு தினமும் நீர் ஊற்றி கோலமிட்டு, மாடத்தின் கீழ்ப்பகுதியில் சிறிய அகல்விளக்கு ஏற்றி வழிபட, வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து காணப்படும்.
- திருமால் ஆலயங்களில் துளசிவனம்
திருமால் ஆலயங்களில் துளசிவனம், துளசிமாடம் இருக்கும். துளசி மாடத்திற்கு தினமும் பூஜைகள் நடைபெறும்.
- ஸ்ரீரங்கம் துளசி மாடத்தின் சிறப்பு
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவிலில், ஸ்ரீஆண்டாள் சந்நிதிக்குச் செல்லும் வழியில் மிகவும் போற்றக்கூடிய துளசி மாடம் மற்ற துளசிமாடத்தைவிட மாறுபட்டது. ஆமையின் திருவுருவத்தின் மேல் அமைந்துள்ள துளசி மாடம் அருகில் வில்வமரமும் உள்ளது. ஜலந்திரனை அழிக்க சிவபெருமானுக்கு உதவிய மகாவிஷ்ணு ஆமை அவதாரத்தில் இருக்க, அவருக்குப் பிடித்தமான பிருந்தையான துளசி அவர் முதுகில் மாடத்தில் உள்ளாள்.
- நெய்விளக்கு ஏற்றி வலம் வரும் பலன்
துளசி மாடத்திற்கருகில் நெய்விளக்கு ஏற்றி வலம் வந்தால் அவர்கள் மகாவிஷ்ணு, மகாலட்சுமியின் அம்சமாக அப்பொழுது மாறுவதாக ஐதீகம்.
- கன்னிப் பெண்கள் மற்றும் துஷ்ட சக்திகளிடம் இருந்து பாதுகாப்பு
துளசி மாடத்தை கன்னிப் பெண்கள் விளக்கேற்றி வழிபட, அவர்களுக்குப் பிடித்தமான வரன் அமையும்; துளசிச் செடி துஷ்ட சக்திகளை வீட்டினுள் அனுமதிக்காது. துளசியைப் பூஜிப்பவர் வீட்டில் மகாலட்சுமி நித்யவாசம் செய்வாள்.