பூரம் (Pooram) நட்சத்திர (star) குணநலன்கள் மற்றும் ஜோதிட பலன்கள்
பூரம் நட்சத்திரத்தின் பொதுவான குணநலன்கள்
பூரம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர தசை குழந்தைப் பருவத்திலேயே வந்துவிடும். சுக்கிரனால் குழந்தைக்கு ஏற்படக்கூடிய பலன்கள் தந்தையின் மூலம் கிடைக்கும். தந்தை, கலைத்துறையில் பிரகாசிப்பதற்கான வாய்ப்பும் பணமும் புகழும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழும் யோகமும் உண்டாகும்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெண்மையின் சாயலுடன் காணப்படுவார்கள். மற்றவர்களைக் கவரும் வசீகரத் தோற்றம்கொண்டிருப்பார்கள். நடைமுறையில் யதார்த்தமாக இருப்பார்கள். எதையும் எளிதாக எடுத்துக்கொள்வார்கள். எப்போதும் எதையாவது சிந்தித்தபடி இருப்பார்கள். அன்பான மனமும், பிறருக்கு உதவும் இரக்க குணமும் கொண்டிருப்பார்கள்.
இனிமையாகப் பேசி காரியம் சாதிப்பவர்களாக இருப்பார்கள். நடக்கப்போவதை முன்கூட்டியே அறிந்துகொண்டு அதற்குத் தகுந்தபடி செயல்படுவார்கள். கலைகளைக் கற்பதில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள். எப்போதும் பரபரப்பாகக் காணப்படுவார்கள். எதிரிகளையும் வெற்றிகொள்ளும் வல்லமை பெற்றிருப்பார்கள்.
எப்போதும் நேர்மைக்கும் சத்தியத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். சுயமாக முன்னேற வேண்டும் என்று நினைத்து, அதற்காகக் கடுமையாக உழைத்து முன்னேறுவார்கள். விதவிதமான ஆடைகளை அணிவதிலும், அடிக்கடி வாகனத்தை மாற்றுவதிலும் ஆர்வம் காட்டுவார்கள்.
பூரம் நட்சத்திர பாதவாரியான பலன்கள்
பூரம் 1-ம் பாதம்
நட்சத்திர அதிபதி - சுக்கிரன்; ராசி அதிபதி - சூரியன்; நவாம்ச அதிபதி - சூரியன்.
பூரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் தன்மானம் மிக்கவர்களாக இருப்பார்கள். எந்தச் சூழ்நிலையிலும் சுயகௌரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். லட்சியத்துடன் வாழ்வார்கள். தெய்வப் பணிகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதே மேலான வழிபாடு என்று நினைப்பார்கள்.
பூரம் 2-ம் பாதம்
நட்சத்திர அதிபதி - சுக்கிரன்; ராசி அதிபதி - சூரியன்; நவாம்ச அதிபதி - புதன்.
எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். எப்படிப்பட்ட கடினமான சூழல் ஏற்பட்டாலும், எளிதாகக் கடந்துவிடுவார்கள். குழந்தையுள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆடம்பரத்தை விரும்ப மாட்டார்கள். கல்வி, விளையாட்டு இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டுவார்கள்.
பூரம் 3-ம் பாதம்
நட்சத்திர அதிபதி - சுக்கிரன்; ராசி அதிபதி - சூரியன்; நவாம்ச அதிபதி - சுக்கிரன்.
அழகும் கம்பீரமுமான தோற்றம் பெற்றிருப்பார்கள். ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று விரும்புவார்கள். சமூகத்தில் அனைத்துத் தரப்பினருடனும் நட்புடன் பழகுவார்கள். ஆன்மிகத்தில் அளவு கடந்த ஈடுபாடுகொண்டிருப்பார்கள்.
பூரம் 4-ம் பாதம்
நட்சத்திர அதிபதி - சுக்கிரன்; ராசி அதிபதி - சூரியன்; நவாம்ச அதிபதி - செவ்வாய்.
துணிச்சலான மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த விஷயத்திலும் துணிந்து முடிவெடுப்பார்கள். நேர்மைக்கும் நியாயத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். பிரச்னைகளை எதிர்கொள்வதில் உறுதியாக இருப்பார்கள்.
வழிபட வேண்டிய தெய்வங்கள் மற்றும் அதிர்ஷ்ட ரத்தினம்
வழிபடவேண்டிய தெய்வம்: ஶ்ரீகாமாட்சி அம்மன், மகாலட்சுமி
அதிர்ஷ்ட ரத்தினம்: வைரம் அல்லது ஜிர்கான்
வழிபடவேண்டிய தலங்கள்: சூரியனார் கோவில், கஞ்சனூர்