நவராத்திரி என்பது சக்தி தேவியை வணங்குவதற்கான ஒரு புனிதமான இந்து பண்டிகை. இந்த நாட்களில், பெண் குழந்தைகளை வழிபடுவது, நம் மனதில் மரியாதையையும், நல்ல மாற்றங்களையும் ஏற்படுத்தும். தேவி பாகவதத்தில் மகரிஷி வியாசர் விளக்கியபடி, ஸ்ரீராமபிரான் கூட சீதையை மீட்க நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து அம்பிகையின் அருளைப் பெற்றார். இந்த அற்புதமான கதை ஜோதிடம்360-இல்.
நவராத்திரி மகிமையும் ராமரின் தவமும்
அனைத்துக்கும் ஆதாரமாகத் திகழ்பவள் அன்னை சக்திதான் என்பதால், நவராத்திரி நாள்களில் சக்தியின் ஆதர்ச வடிவமாக விளங்கும் பெண் குழந்தைகளை நாம் பூஜிக்கிறோம். இதன் காரணமாக நம்மில் சிறியவரையும் மதிக்கும் மனப்பான்மை நமக்கு ஏற்படுவதுடன், பூஜிக்கப்படும் குழந்தைகளின் மனதிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகிறது. சிவபெருமானும் ராமபிரானும் கூட நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்ததாக புராணங்கள் சொல்கின்றன. தேவி பாகவதத்தில் மகரிஷி வியாசர், ராமபிரான் அனுஷ்டித்த நவராத்திரி விரதம் பற்றி விளக்கி உள்ளார்.
சீதையை ராவணன் கடத்திச் சென்ற பிறகு ராமர் மிகுந்த துயரத்துடன் லட்சுமணனுடன் அமர்ந்திருந்தார். அப்போது திரிலோக சஞ்சாரியான நாரதர் அங்கே வந்தார். அவரை வரவேற்று வணங்கிய ஸ்ரீராமனும் லட்சுமணனும் அவர் அருகே அமர்ந்தனர். ஸ்ரீராமனின் முகவாட்டத்தைக் கண்ட நாரதர் பேசத் தொடங்கினார், "'ரகுகுல திலகா! நீ வருத்தத்துடன் இருப்பதற்கான காரணத்தை நான் அறிவேன். திரிலோக சஞ்சாரியாக நான் சஞ்சரிக்கும் வழியில் சொர்க்கத்துக்கும் சென்று வந்தேன். அங்கே எனக்கு சில உண்மைகள் தெரிய வந்தன. அந்த விவரங்களை உன்னிடம் தெரிவிக்கவே வந்தேன்'' என்று கூறியவர் தொடர்ந்தார்.
''மகாலட்சுமியின் அம்சமான சீதை முற்பிறவியில் ஒரு முனிவரின் மகளாக வேதவதி என்ற பெயரில் தோன்றியவள். தவத்தில் இருந்தவளைக் கண்டு மோகம் கொண்ட ராவணன், அவளை அடைய ஆசை கொண்டு அவளுடைய கையைப் பிடித்து இழுக்க முயற்சித்தான்.. கோபம் கொண்ட வேதவதி, 'நாராயணனை மணக்க தவம் புரியும் என்னைக் கண்டு மோகித்து, என் கையையும் பிடிக்கத் துணிந்த உன்னை நான் கொல்வதற்காக மறுபடியும் கர்ப்பவாசம் இல்லாமல் பூமியில் தோன்றுவேன்' என்று சாபம் கொடுத்துவிட்டு, அக்னியில் விழுந்து உயிரை மாய்த்து கொண்டாள்.. அவள் தான் சீதையாக அவதரித்து இருக்கிறாள். தான் அழிவதற்காகவே ராவணன் சீதையைக் கடத்திச் சென்றிருக்கிறான். மகாவிஷ்ணுவின் அவதாரமான நீயும் ரகுவம்சத்தில் தோன்றி இருக்கிறாய். உன்னால் ராவணன் அழியப் போவது உறுதி என்று நினைத்து தேவலோகத்தில் எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்'' என்று நாரதர் விளக்கினார்.
ராவணனை சம்ஹாரம் செய்வதற்கான வழியையும் நாரதர் ராமருக்கு விளக்கினார். ''ராமச்சந்திரா! ராவணனை அழிப்பதற்கான வழியைச் சொல்கிறேன். நீ புரட்டாசி மாதம் வரும் நவராத்திரியில் விரதம் இருந்து, அம்பிகையை பூஜை செய்தால், அம்பிகை உனக்கு அளவற்ற சித்திகளைத் தருவாள். இந்திரனும், விஸ்வாமித்திரர் போன்ற மகரிஷிகளும் நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து அம்பிகையை வழிபட்டு பலன் அடைந்திருக்கின்றனர். எனவே நீயும் நவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பாய்'' என்று கூறி விரதம் அனுஷ்டிக்கும் முறைகள் பற்றியும் கூறினார்.
ஸ்ரீராமரின் நவராத்திரி பூஜை மற்றும் அம்பிகையின் அருள்
நாரதர் கூறியபடியே, நவராத்திரி பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. காட்டில் கிடைத்த பொருட்களைக் கொண்டு நவராத்திரி விரதத்தையும், பூஜைகளையும் ஸ்ரீராமர் மேற்கொள்ள துவங்கினார். மால்யவான் மலையில் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ராமர் பிரதமை முதல் விரதம் இருந்து பூஜைகளை நடத்தினார். எட்டாவது நாள் அஷ்டமி தினத்தில் நள்ளிரவு வேளையில் மால்யவான் மலையின் உச்சியில் அம்பிகை சிம்ம வாகனத்தில் தோன்றி ராமருக்கு தரிசனம் தந்தாள். ராமனின் பூர்வ அவதாரங்களை உணர்த்தியதுடன், ராவணனை சம்ஹாரம் செய்ய அருள் புரிந்து மறைந்தாள். இந்த அற்புதமான கதை, நவராத்திரி விரதத்தின் மகத்துவத்தையும், தேவி சக்தியின் எல்லையற்ற அருளையும் நமக்கு உணர்த்துகிறது.
முக்கிய அம்சங்கள்
- சக்தி தேவியின் மகிமை: நவராத்திரியில் பெண் குழந்தைகளை பூஜிப்பது, அன்னை சக்தியின் வடிவமாக கருதி வணங்குவதாகும்.
- ராமரின் நவராத்திரி: சீதையை ராவணனிடமிருந்து மீட்க, ஸ்ரீராமபிரான் அம்பிகையை வேண்டி நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்தார்.
- வேதவதி சாபம்: சீதை முற்பிறவியில் வேதவதியாக இருந்து, ராவணனுக்கு சம்ஹார சாபத்தை இட்டாள்.
- நாரதர் வழிகாட்டுதல்: ராவணனை வெல்ல, நாரதர் ராமருக்கு நவராத்திரி விரத வழிமுறைகளை விளக்கினார்.
- அம்பிகையின் தரிசனம்: மால்யவான் மலையில் அஷ்டமி இரவு, அம்பிகை சிம்ம வாகனத்தில் தோன்றி ராமருக்கு அருள் புரிந்தாள்.