கந்த சஷ்டி விரதம் என்பது முருகப் பெருமானின் அருள் வேண்டி, நம்முடைய வாழ்வில் இருக்கும் பல விதமான துன்பங்களில் இருந்து விடுபடுவதற்காக கடைபிடிக்கப்படும் ஒரு சக்தி வாய்ந்த விரதமாகும். மாதந்தோறும் சஷ்டி திதி வந்தாலும், ஐப்பசி மாதத்தில் வரும் கந்த சஷ்டி விரதம் மிகவும் சிறப்பானது. இந்த விரதத்தை ஏழு நாட்களும் இருக்க முடியாதவர்கள், ஒருநாள் மட்டும் விரதம் இருந்து முருகனின் அருளையும், அனைத்து பலன்களையும் பெற முடியும். ஜோதிட ரீதியாகவும் இந்த விரதம் பல நன்மைகளைத் தரும் என நம்பப்படுகிறது.
ஒருநாள் கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை
அக்டோபர் 27ம் தேதி (அல்லது சஷ்டி திதி வரும் நாள்) அதிகாலையிலேயே எழுந்து, குளித்து விட்டு, வீட்டில் முருகப் பெருமானின் படத்திற்கு முன்பு விளக்கேற்றி வைக்க வேண்டும். என்ன காரணத்திற்காக அல்லது என்ன வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக விரதம் இருக்கிறீர்களோ அதை முருகப் பெருமானிடம் மனதார சொல்லி வேண்டிக் கொண்டு, விரதத்தை துவக்க வேண்டும். "முருகா நீயே துணை...என்னுடைய விரதத்தை நன்றாக நிறைவு செய்ய அருள் செய்து, என்னுடைய விரதம் முழு பலனை தந்து, உன்னுடைய அருளால் என்னுடைய வேண்டுதல்கள் நிறைவேற அருள் செய் முருகா" என மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். ஷட்கோண தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பு.
முழுவதுமாக உபவாசமாக இருக்க முடிந்தால் விரதம் இருக்கலாம். இல்லை என்றால் பால், பழம் மட்டும் சாப்பிட்டுக் கொண்டு விரதம் இருக்கலாம். முருகப் பெருமானின் திருவருளைப் பெற இந்த எளிய முறை போதுமானது.
முருகனை வழிபடும் முறை
முருகப் பெருமானின் படத்திற்கு செவ்வரளி, முல்லை, செம்பருத்தி போன்ற மலர்களால் சூட்டி வழிபட வேண்டும். பால் மற்றும் பழம் மட்டும் நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். முருகனுக்கு விருப்பமான கந்த சஷ்டி கவசம், வேல் மாறல், திருப்புகழ் என ஏதாவது ஒரு பாடலை நாள் முழுவதும் பாடிய படி இருக்கலாம். எதுவும் தெரியவில்லை என்றால், "ஓம் சரவண பவ" என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
முடிந்தால் அருகில் உள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று முருகனையும், சூரசம்ஹார நிகழ்வையும் தரிசிக்கலாம். அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகனை நினைத்து வழிபட்டால் விசேஷ பலன் உண்டு. முடியாதவர்கள் வீட்டில் இருந்த படியே டிவி.,யில் சூரசம்ஹாரத்தை கண்டு தரிசிக்கலாம். மாலையில் முருகப் பெருமானுக்கு பல விதமான கலவை சாதங்கள் அல்லது சர்க்கரை பொங்கல் நைவேத்தியமாக படைத்து வழிபடலாம்.
சஷ்டி விரதம் நிறைவு செய்யும் முறை
சூரசம்ஹாரம் நிறைவடைந்த பிறகு, கண்டிப்பாக தலைக்கு குளிக்க வேண்டும். குளித்து விட்டு வீட்டில் ஷட்கோண தீபம் ஏற்றி, முருகனுக்கு படைத்த பால் அல்லது சாதத்தை மற்றவர்களுக்கு தானமாக கொடுத்து விட்டு, நீங்களும் சாப்பிட்டு, விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். விரதத்தை நல்ல படியாக நிறைவு செய்ய அருள் புரிந்ததற்காக முருகப் பெருமானுக்கு மனதார நன்றி தெரிவிக்க வேண்டும். முருகப் பெருமானுக்கு மலர்களால் அர்ச்சனையும் செய்து வழிபடலாம். முடிந்தவர்கள் வீட்டில் முருகன் விக்ரஹம் அல்லது வேல் வைத்திருந்தால் அதற்கு அபிஷேகம் செய்தும் வழிபாடு செய்து, விரதத்தை நிறைவு செய்யலாம். இப்படி ஒரு நாள் விரதம் இருந்தாலும் ஏழு நாட்கள் கந்த சஷ்டி விரதம் இருந்த பலனை முழுமையாக பெற முடியும்.