கருட புராணத்தில் மரணம், மறுபிறப்பு, மரணத்திற்கு பிறகான வாழ்க்கை என பல ஆன்மீக விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது. மரணம் நெருங்கும் முன் ஏற்படும் மிக முக்கியமான அறிகுறிகளை இங்கு காணலாம்.
மரணத்தின் தவிர்க்க முடியாத உண்மை
உலகில் எவராலும் ஏற்றுக்கொள்ள மறுக்கும், ஆனால் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை மரணம். பூமியில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் ஒரு நாள் மரணம் உண்டு. மனித உருவில் அவதரித்த ராமர், கிருஷ்ணர் கூட இதற்கு விதிவிலக்கல்ல. பிறப்பு-இறப்பு என்ற வாழ்க்கை சுழற்சியில் இருந்து எவராலும் தப்பிக்க முடியாது. இயற்கையின் இந்த விதியை இறைவனே கூட மாற்றி எழுத முடியாது. மரணம் யாருக்கு எப்போது, எப்படி வரும் என எவருக்கும் தெரியாது, ஆனால் நமக்காக விதிக்கப்பட்ட நேரத்தில், ஒரு நொடி கூட காத்திருக்காமல் கண்டிப்பாக வரும்.
கருட புராணம் மற்றும் மரணம்
கருட புராணத்தில் நாம் செய்யும் தவறுகளுக்கான தண்டனைகள் மட்டுமல்ல, மரணத்திற்கு பிறகு நாம் செல்லும் உலகம் எப்படி இருக்கும் என்பது பற்றி பல தகவல்கள் சொல்லப்பட்டுள்ளது. மரணத்துடன் தொடர்புடைய பல விஷயங்களும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை முழுமையாக தெரிந்து கொண்டால் மரணம் பற்றிய பயம் விலகும்.
ஒருவரை மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அந்த நபரால் மரணமடைவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே உணர முடியும். சில விசித்திரமான விஷயங்கள் அவர்களுக்கு நடக்கத் துவங்கும். அதிலிருந்தே மரணம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். எந்தெந்த அறிகுறிகள் தோன்றினால் மரணம் நம்மை நெருங்குகிறது என்பதை கருட புராணம் சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.
கருட புராணம் கூறும் மரணத்தின் அறிகுறிகள்
- 1. நல்லது, கெட்டதை உணர்தல்: ஒருவர் தன்னுடைய மரணத்திற்கு முன், தன்னுடைய வாழ்நாளில் செய்த நன்மை, தீமைகள் பற்றிய நினைவுகள் அடிக்கடி வரத் துவங்கும். அதற்கான பலன்களை அவர் பார்க்கத் துவங்குவார். வாழ்க்கையில் எப்போது, யாருக்கு நல்லது செய்தோம், யாருக்கு தீமை செய்தோம் என்ற உண்மை நினைவுகள் மனதில் சினிமா போல் வந்து செல்லும். நல்லதுக்காக மகிழ்ச்சியும், கெட்டதுக்காக தனக்கு தண்டனை கிடைக்குமோ என்ற பய உணர்வும் ஏற்படும். தீமைகளுக்கான பலன்கள் பாவங்களாக துரத்த ஆரம்பிக்குமே என்ற பதற்றம் தோன்றும்.
- 2. விசித்திரமான நிழல்கள் தோன்றுவது: மரணம் நெருங்குவதற்கு முன் சில விசித்திரமான நிழல்கள் கண்ணுக்குத் தெரியத் துவங்கும். யாரோ ஒருவர் அல்லது ஏதோ ஒன்றின் நிழல் தன்னை துரத்துவது போன்ற உணர்வு ஏற்படும். அதை அவர்களால் உணர முடியுமே தவிர, அந்த நிழலை கண்ணால் அவர்களால் காண முடியாது.
- 3. இறந்தவர்களின் ஆத்மா கண்ணுக்கு தெரிவது: மரணத்தின் வாசலை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு ஏற்கனவே இறந்தவர்களின் ஆத்மா கூட தெரியும். இறந்தவர்களின் ஆத்மாக்கள் தங்களுடன் இருப்பதையும், தொடர்பு கொள்ள நினைப்பதையும் நன்கு உணர முடியும். சில நேரங்களில் அவர்களுக்கு மிகவும் பிடித்தவர்களின் ஆத்மாக்கள் கூட தெரியத் துவங்கும். தன்னைச் சுற்றி நடக்கும் அமானுஷ்ய விஷயங்களால் எப்போதும் ஒரு விதமான பய உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.
- 4. எமதூதரர்கள் வருவதை உணர முடியும்: மரணம் நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு நபருக்கு எமதூதர்கள் தெரியத் துவங்குவார்கள். யாரோ தன்னை கூட்டிக் கொள்ள வந்திருப்பதை போலவும், யாரோ தனக்காக காத்துக் கொண்டிருப்பதை போல ஒரு உணர்வு ஏற்படும். மர்மமான சக்திகள், விநோதமான மனிதர்கள் கண்ணுக்குத் தெரியத் துவங்கும். எப்போதும் தன்னைச் சுற்றி யாரோ இருப்பதை போல் தோன்றுவதால் பயந்த நிலையிலேயே இருப்பார்கள். குறிப்பாக, இரவு நேரங்களில் இந்த மர்மமான அமானுஷ்ய சக்திகள் தோன்றுவது நடக்கும் என கருட புராணம் சொல்கிறது.
- 5. முன்னோர்கள் பற்றிய கனவுகள்: மரணத்துக்கு முன் ஒருவருக்கு அவர்களின் முன்னோர்கள் பற்றி அடிக்கடி கனவுகள் வரும். கனவில் வரும் முன்னோர்கள் தங்களுடன் இருக்க வருமாறு அழைப்பது போல் இருக்கும். இறந்த முன்னோர்களின் நினைவுகள் அதிகமாக வருவது, அவர்களை மீண்டும் பார்க்க வேண்டும், அவர்களுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணமும், ஆசையும் மீண்டும் தோன்றும்.
- 6. கடந்தகால சம்பவங்கள் மீண்டும் தோன்றுதல்: சில வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்கள் மீண்டும் நடப்பது போலவும், சில விஷயங்கள் மீண்டும் நடக்காதா என்ற எண்ணங்களும் அதிகம் தோன்றும். சில சம்பவங்கள் இப்போது நடப்பது போன்ற உணர்வு ஏற்படும் என கருட புராணம் சொல்கிறது.