அலோபீசியா அரேட்டா என்பது கணிக்க முடியாத முடி இழப்பை ஏற்படுத்தும் ஒரு நிலையாகும். இது ஆண், பெண், வயது பேதமின்றி யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். இதற்கு பெரும்பாலும் மரபணு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த திடீர் முடி உதிர்தலை இயற்கையாகவே கட்டுப்படுத்தவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவும் சில பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்.
முடி உதிர்தலை தடுக்கும் வீட்டு வைத்தியங்கள்
1. தேன் மற்றும் எலுமிச்சை
தேன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன் உச்சந்தலையை சுத்தம் செய்ய உதவுகிறது. இது முடி நுண்ணறை துளைகளை அடைத்திருக்கும் அழுக்குகளை வெளியேற்றுகிறது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி உச்சந்தலை தொற்றுக்களுக்கு எதிராக போராட உதவுகிறது.
பயன்படுத்தும் முறை:
அரை டீஸ்பூன் தேன் மற்றும் நீர்த்த அரை டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை நன்றாக கலந்து, உச்சந்தலையில் பாதிக்கப்பட்ட இடத்தில் மென்மையாக தேய்த்து, சிறிது நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும்.
2. வெங்காயச்சாறு
வெங்காயச்சாறு கூந்தல் வளர்ச்சிக்கும், முடி உதிர்வை தடுக்கவும் உதவும். இதில் உள்ள சல்பர் முடி வளர்ச்சியை ஆதரிக்கிறது. இது ஃப்ரீரேடிக்கல் சேதத்தை எதிர்த்துப் போராடி, உச்சந்தலை இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும், இது எந்த வகையான தொற்றுகளையும் தடுக்க செய்கிறது.
பயன்படுத்தும் முறை:
வெங்காயத்தை நறுக்கி நீர்விடாமல் மிக்ஸியில் அரைத்து, அதன் சாறை முடி இல்லாமல் இருக்கும் திட்டு திட்டான இடங்களில் தடவி விடவும். 40 நிமிடங்கள் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு கூந்தலை அலசவும்.
3. கற்றாழை சாறு
கற்றாழை சருமம் மற்றும் கூந்தல் இரண்டுக்கும் நல்லது. இது கூந்தல் வளர்ச்சிக்கு உதவும், முடி உதிர்வதை தடுக்கும், மென்மையான கூந்தலை பெற உதவும். அலோபீசியா அரேட்டா நிலையில் கற்றாழை முடி வளர்ச்சியை தூண்ட செய்கிறது.
பயன்படுத்தும் முறை:
கற்றாழை மடல்களைப் பிரித்து, அதன் ஜெல்லையை நேரடியாக எடுத்து கூந்தல் முழுவதும், குறிப்பாக உச்சந்தலை பாதிப்பு பகுதிகளில் தடவி விடவும். சிறிது நேரம் கழித்து கூந்தலை அலசி விடவும். வாரம் ஒரு முறை இதை பயன்படுத்தலாம்.
4. பூண்டு எண்ணெய்
பூண்டு வெங்காயத்தைப் போன்று சல்பர் நிறைந்தது. இதை தனித்து பயன்படுத்தினால் உச்சந்தலை எரிச்சலுக்கு ஆளாகலாம். அதனால் பூண்டுடன் தேங்காயெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து பயன்படுத்தினால் முடி நன்றாக வளர்வதை பார்க்கலாம்.
பயன்படுத்தும் முறை:
பூண்டு பற்களை இடித்து சாறுடன் வைக்கவும். பிறகு நல்லெண்ணெய் அல்லது தேங்காயெண்ணெயைக் கொதிக்க வைத்து ஆறவிடவும். தலைக்குளியலுக்கு முன்பு இந்த எண்ணெயை மென்மையாக மசாஜ் செய்து உச்சந்தலை முழுவதும் தடவி விடவும்.
5. க்ரீன் டீ
க்ரீன் டீ சமீபகாலமாக பலரும் ஆரோக்கியம் மேம்பட எடுத்துவருகிறார்கள். இது முடி வளர்ச்சிக்கும் நன்மை செய்யக்கூடியது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், முடி உதிர்தலை ஏற்படுத்தும் DHT என்னும் உற்பத்தியை தடுக்கிறது. க்ரீன் டீயை ஹேர் பேக்காகவும் பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை:
க்ரீன் டீயைக் காய்ச்சி ஆறவைத்துக் கொள்ளவும். கூந்தலை ஷாம்பு கொண்டு சுத்தம் செய்த பிறகு இறுதியாக இந்த நீரில் அலசி விடவும். பிறகு கதகதப்பான வெந்நீரில் நனைத்த துண்டை எடுத்து தலையில் சுற்றி விடவும்.
6. ரோஸ்மேரி எண்ணெய்
ரோஸ்மேரி எண்ணெய் கூந்தல் பராமரிப்பில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இது மயிர்க்கால்களை தூண்டி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உச்சந்தலை அழற்சியைக் குறைக்கிறது. அலோபீசியா அரேட்டா பாதிப்பினால் ஏற்படும் அழற்சியை குறைக்க இது உதவுகிறது.
பயன்படுத்தும் முறை:
இதை தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்ற கேரியர் எண்ணெய்களுடன் கலந்து கூந்தலுக்கு பயன்படுத்தலாம். ரோஸ்மேரி எண்ணெயை தனித்து பயன்படுத்த வேண்டாம். தலைக்குளியலுக்கு முன்பு இந்த எண்ணெய் மசாஜ் தடவி பிறகு ஷாம்பு தேய்த்து குளிக்கலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஆம், அலோபீசியா அரேட்டாவை முழுமையாக குணப்படுத்த சிகிச்சைகள் இல்லை என்றாலும், கார்டிகோஸ்டிராய்டுகள் போன்ற அழற்சி எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இவை முடி வளர்ச்சியை தூண்டும், ஆனால் மீண்டும் வழுக்கை விழுவதைத் தடுக்காது. அதே நேரம், மேலே குறிப்பிட்டுள்ள வீட்டு வைத்தியங்கள் பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும். மருத்துவ ஆலோசனையுடன் இவற்றைப் பயன்படுத்துவது சிறந்தது.
பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நோக்கங்களுக்காக மட்டுமே. உங்களுக்கு பாதுகாப்பான ஒன்றை தேர்வு செய்ய துறை சார்ந்த நிபுணரிடம் ஆலோசிக்கலாம். இங்கு வழங்கப்பட்ட தகவலின் துல்லியம், நம்பகத்தன்மைக்கு jothidam360.in பொறுப்பேற்காது.