ஆயுர்வேதத்தில் அபியங்கா மசாஜ் என்பது ஒரு பாரம்பரிய மருத்துவ முறையாகும். உடலையும் மனதையும் கவனித்துக்கொள்வதற்கும், தோஷங்களை சமநிலையில் வைத்துக்கொள்வதற்கும், புத்துணர்ச்சியுடன் உணர வைப்பதற்கும் உதவும் அற்புத சிகிச்சையாக இது கருதப்படுகிறது. இந்த வழிகாட்டியில் அபியங்கா மசாஜ் செய்வது எப்படி, அதன் நன்மைகள், மற்றும் சரியான எண்ணெய் தேர்வு குறித்து விரிவாக காண்போம்.
அபியங்கா மசாஜ் செய்வது எப்படி?
சுய அபியங்கா மசாஜ் செய்வதற்கு அதிக நேரம் தேவைப்படாது. ஆரம்ப நிலையில் பஞ்சகர்மா நிபுணருடன் இணைந்து கற்றுக்கொள்வது சிறந்தது. இங்கே படிப்படியான வழிகாட்டுதல்:
- உங்கள் தோஷத்துக்கு ஏற்ற தரமான எண்ணெயை தேர்வு செய்து, டபுள் பாய்லிங் முறையில் மென்மையாக சூடாக்கவும். எண்ணெய் சூடாக இருப்பது உடலில் தளர்வை ஏற்படுத்தும்.
- உச்சந்தலையை வட்ட வடிவில் மென்மையாக மசாஜ் செய்வதில் தொடங்கவும்.
- முகம் மற்றும் காதுகளில் மென்மையாக மசாஜ் செய்து விடவும். முகங்களை மேல் நோக்கி மசாஜ் செய்யவும். சருமத்தில் எண்ணெய் உறிஞ்சப்படும் வரை வைத்திருந்து, பிறகு சமமான அழுத்தத்தை கொடுக்கலாம்.
- கைகள், கை மணிக்கட்டுகள், கை மூட்டுகள், கால் மூட்டுகள், கணுக்கால், முட்டி போன்ற இடங்களை சுற்றி எண்ணெய் வைத்து மூட்டுகளை சுற்றி மசாஜ் செய்யுங்கள்.
- வயிறு பகுதியில் மென்மையாக வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். மார்பு பகுதியிலும் மசாஜ் செய்யவும்.
- பாதங்களில் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்து நன்றாக எண்ணெய் தடவி மென்மையான அழுத்தம் கொடுங்கள். உள்ளங்கைகள், விரல் நகங்களிலும் அழுத்தம் கொடுங்கள்.
- மசாஜ் செய்த பிறகு சில நிமிடங்கள் அமைதியாக உட்காரவும்.
- வெதுவெதுப்பான அல்லது மந்தமான நீரில் குளித்து உடலை ஈரமில்லாமல் உலர விடவும். முழுமையான அபியங்கா மசாஜ் செய்வதற்கு 15 முதல் 45 நிமிடங்கள் வரை ஆகலாம்.
அபியங்காவுக்கு சரியான எண்ணெய் தேர்ந்தெடுப்பது எப்படி?
அபியங்கா மசாஜ் செய்வதன் நன்மைகளை முழுமையாக பெறுவதற்கு சரியான எண்ணெயை தேர்ந்தெடுப்பது முக்கியம். குறிப்பாக தோஷத்தை பொறுத்து எண்ணெயை தேர்ந்தெடுக்க வேண்டும்:
- வாத தோஷம்: வறட்சி மற்றும் குளிர்ச்சியால் வகைபடுத்தப்படுகிறது. வெப்பமூட்டும் நல்லெண்ணெய், ஆமணக்கு எண்ணெய் போன்ற எண்ணெய்கள் வாத தோஷத்துக்கு ஏற்றது.
- பித்த தோஷம்: வெப்பம் மற்றும் தீவிரத்தின் பண்புகளை கொண்டுள்ளது. இவர்கள் தேங்காய் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்ற உடலை குளிர்விக்கும் எண்ணெய்களை பயன்படுத்தலாம்.
- கப தோஷம்: கனமாகவும் குளிராகவும் இருப்பதால் கடுகு எண்ணெய், திராட்சை விதை எண்ணெய் மற்றும் இலேசான எண்ணெய்கள் பயன்படுத்தலாம்.
எண்ணெயில் தேவையான பண்புகளை பெற உரிய மூலிகைகளை சேர்க்கலாம். மன அழுத்தம் குறைய, புத்துணர்ச்சியூட்டும் பண்புகள் பெற, ஆற்றலுடன் வளைய வர உரிய பொருள்களை இந்த எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.
அபியங்கா மசாஜ் செய்வதன் நன்மைகள்
இந்த ஆயுர்வேத சுய மசாஜ் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது:
- உடல் நச்சு நீக்கம்: மசாஜ் செய்யும் போது இரத்த ஓட்டம் சீராக இயங்குவதால் நச்சு நீக்கம் செய்கிறது.
- மூட்டுகள்: மூட்டுகளை சுற்றி மென்மையான மசாஜ் செய்வது மூட்டு இயக்கத்தை மேம்படுத்துகிறது.
- தூக்கம்: தூக்கமின்மை பிரச்சனை இருப்பவர்கள் மசாஜ் செய்வதன் மூலம் தரமான தூக்கம் பெறலாம்.
- தோல் புத்துணர்ச்சி: சருமத்தை ஈரப்பதமாக்கி நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துவதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
- மன அழுத்தம்: மசாஜ் செய்வதால் கார்டிசோல் ஹார்மோன் குறைக்கப்பட்டு மன அழுத்தம் குறைகிறது.
- தோஷ சமநிலை: அபியங்கா மசாஜ் உடலில் வாத, பித்த, கப தோஷங்களை அமைதிப்படுத்துகிறது.
- நரம்புகள்: மசாஜ் செய்யும் போது உடல் நரம்புகளை வலுப்படுத்துகிறது.
அபியங்கா மசாஜ் யாருக்கு நல்லது?
அபியங்கா மசாஜ் ஒட்டுமொத்த ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. குறிப்பாக தசை விறைப்பு, மூட்டு வலி, மன அழுத்தம் கொண்டவர்களுக்கு இவை சிறந்த பலனை அளிக்கலாம். ஆனால் இவை மட்டுமே இவர்களுக்கு தீர்வளிக்காது, உடல்நல பிரச்சனைகளுக்கான சிகிச்சையின் ஒரு பகுதியாக இவை இருக்க வேண்டும். வலி உணர்வு இருப்பவர்கள் சுயமாக மசாஜ் செய்ய முடியாத நிலையில் குடும்ப உறுப்பினர்கள் மசாஜ் செய்யலாம். சூடான எண்ணெயை பயன்படுத்தும் போதும், மசாஜ் அழுத்தம் கொடுக்கும் போதும் கவனமாக இருக்க வேண்டும். வாரம் ஒரு முறை இந்த மசாஜ் செய்யலாம்.
அபியங்கா மசாஜ் பக்க விளைவுகள் என்ன?
இந்த மசாஜ் பொதுவாக பாதுகாப்பானது என்றாலும், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தவிர்க்க வேண்டும்:
- கர்ப்பிணி பெண்கள்
- சிறு குழந்தைகள்
- சில மருத்துவ நிலைமைகள் கொண்டவர்கள்
- அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள்
- மிக மென்மையான உணர்திறன் சரும பிரச்சனை கொண்டவர்கள்
மேற்கண்ட நிலையில் மசாஜ் செய்ய விரும்பினால், ஆயுர்வேத மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது முக்கியம்.
இறுதியாக, அபியங்கா மசாஜ் மூலிகை எண்ணெய்களை கொண்டு வீட்டிலேயே சுயமாக எப்படி செய்வது, தோஷ நிலைக்கேற்ப எந்த எண்ணெய் பயன்படுத்தலாம், யாருக்கெல்லாம் மசாஜ் நல்லது, யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்துகொண்டோம். நீங்கள் மசாஜ் செய்ய விரும்பினால் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் அவரது வழிகாட்டுதலுடன் செய்வது பாதுகாப்பானது.
பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நோக்கங்களுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. மேலும் விவரங்களுக்கு எப்போதும் மருத்துவரை அணுகவும். இங்கு வழங்கப்பட்ட தகவலின் துல்லியம், நம்பகத்தன்மைக்கு சமயம் தமிழ் பொறுப்பேற்காது.