தெய்வீக ஆற்றல் நிறைந்த ஆடி மாதம், அம்மன் வழிபாட்டிற்கு உகந்த சிறப்பான மாதமாகும். பார்வதியின் தவத்தால் மகிழ்ந்த பரமசிவன், ஆடி மாதத்தை அம்பாள் மாதமாக இருக்க வரம் கொடுத்தார். ஜோதிட ரீதியாக இந்த மாதத்தில் மேற்கொள்ளப்படும் வழிபாடுகள், அளப்பரிய பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை.
ஆடி மாதத்தின் தெய்வீக முக்கியத்துவம்
ஆடி மாதம் என்பது ஆன்மீக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலமாகும். இம்மாதத்தில் பார்வதியின் சக்தியே பிரதானமாக இருக்கும் என்பது ஐதீகம். சிவனுடைய சக்தியை விட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும் என்பதால், அம்பாள் வழிபாட்டிற்கு இதுவே சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.
இந்த மாதத்தில் வரும் ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி மற்றும் ஆடி ஞாயிறு போன்ற நாட்கள் சிறப்பு பெறுகின்றன. "ஆடி செவ்வாய் தேடி குளி" என்ற பழமொழி, ஆடி மாத செவ்வாய்க்கிழமையன்று விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து நீராடி அம்பாளை வழிபட்டால், பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும் என்பதை உணர்த்துகிறது. அதேபோல, ஆடி வெள்ளி வழிபாடு திருமண பாக்கியத்தையும், நீண்ட காலம் குழந்தை பாக்கியம் எதிர்பார்த்திருப்போருக்கு நல்ல அறிவாற்றல் மற்றும் புத்திக்கூர்மையுடன் குழந்தை பிறக்கும் பாக்கியத்தையும் அருளும்.
ஆடி மாதத்தில் நிகழும் முக்கிய விழாக்கள் மற்றும் வழிபாடுகள்:
- பால்குடம் எடுத்தல்
- பொங்கல் வைத்து வழிபடுதல்
- சிறப்பு பூஜைகள் செய்தல்
- தீ மிதித்தல்
- கூழ் ஊற்றுதல்
- அம்மன் கோவில்களுக்குச் சென்று வழிபடுதல்
ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு, ஆடி பௌர்ணமி, ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம் எனப் பல விசேஷ நாட்கள் இந்த தமிழ் மாதத்தில் வருவதால், அம்மன் பக்தர்கள் விரதமிருந்து வழிபடுவதற்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு.
ஆடி மாதம் கூழ் ஊற்றுவது ஏன்? பின்னணி மற்றும் பலன்கள்
ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றும் திருவிழா சிறப்பாக நடைபெறுவதுண்டு. இதற்குப் பின்னால் ஒரு பக்திமிகு வரலாறு உள்ளது.
தவத்தில் சிறந்து விளங்கிய ஜமத்கனி முனிவரை பொறாமை காரணமாக கார்த்த வீரியார்சுனனின் மகன்கள் கொன்று விடுகின்றனர். இதை கேள்விப்பட்டு துக்கம் தாங்க முடியாமல் ஜமத்கனி முனிவரின் மனைவி ரேணுகாதேவி உயிரை விட முடிவு செய்து தீயை மூட்டி அதில் இறங்குகிறார். இந்திரன், வருணனிடம் கூறி மழையை பெய்ய செய்து, தீயை அணைத்தார். தீக்காயங்களால் ரேணுகா தேவியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டன. வெற்றுடலை மறைக்க அருகில் இருந்த வேப்பமர இலைகளை பறித்து ஆடையாக அணிந்தார்.
ரேணுகா தேவிக்கு பசி ஏற்பட்டதால் அருகில் உள்ள கிராம மக்களிடம் சென்று உணவு கேட்டார். அப்போது மக்கள் அவருக்கு பச்சரிசி, வெல்லம், இளநீரை உணவாக கொடுத்தனர். இதைக் கொண்டு ரேணுகாதேவி கூழ் தயாரித்து உணவுண்டார். அப்போது சிவபெருமான் தோன்றி ரேணுகா தேவியிடம், உலக மக்களின் அம்மை நோய் நீங்க நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரமாகும் என்று வரம் அளித்தார்.
இச்சம்பவத்தை நினைவு கூறும் வகையிலும், ரேணுகா தேவியின் பெருமைகளை அனைவரும் அறியும் படி செய்வதற்காகவும் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இது தமிழ் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.
மேலும், ஆடி மாதத்தில் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இதனால் எங்கும் தூசியாக இருக்கும். இதன் காரணமாக காய்ச்சல், இருமல் போன்ற நோய்கள் வரலாம். இதை தவிர்க்கவே மாரியம்மன் கோவில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றுவார்கள். இதை "ஆடிக்கஞ்சி" என்பர். இதில் வேப்பிலை கலந்து தருவதால், இது அம்மனின் அருள் பிரசாதமாகவும், நோய்களைத் தீர்க்கும் சிறந்த மருந்தாகவும் மக்கள் கருதி கொண்டாடுகிறார்கள். நோய்களைத் தீர்த்து, பூமியை செழிக்க வைக்கும் தெய்வமாக ரேணுகாதேவியையே மாரியம்மன் என்ற பெயரில் மக்கள் வழிபடுகிறார்கள்.