முருகப் பெருமானின் திருவருள் பெற்று, அருணகிரிநாதர் பாடிய வேல் வகுப்பு பாடல், பிறவிப் பிணிகளைத் தீர்க்கும் மகத்துவம் வாய்ந்தது. முருகனின் ஞான வேலின் பெருமைகளை எடுத்துரைக்கும் இந்தப் பாடல், பக்தர்களுக்கு ஞானத்தையும் பேரின்ப வாழ்வையும் அருளும். ஜோதிட ரீதியாகவும் spiritual ரீதியாகவும் இந்த பாடல் முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ் இலக்கியத்தில் ஒரு பொக்கிஷமாகத் திகழும் இந்த பதிகம், முருக பக்தர்களுக்கு அமுது போன்றது.
வேல் வகுப்பின் சிறப்பு அம்சங்கள்
வேல் வகுப்பு என்னும் திருவகுப்பு பாடல், அருணகிரிநாதரால் முருகப் பெருமான் மீது பாடப்பட்ட ஒரு அற்புதமான படைப்பு. மருந்து எவ்வாறு உடலில் உள்ள நோய்களைத் தீர்க்குமோ, அதேபோல் பிறவி என்னும் பிணியை தீர்க்கவல்லது இந்த வேல் வகுப்பு பாடல். முருகப் பெருமானின் திருக்கையில் இருக்கும் வேல், ஞானத்தின் வடிவமாகும். அதனால் வேலின் பெருமைகளை பற்றி பாடும் இந்தப் பாடல், படிப்பவர்களுக்கு ஞானத்தையும், பேரின்ப வாழ்வையும் கொடுக்கக் கூடியதாகும்.
தன்னுடைய கோபம் தீர்ந்து திருத்தணி மலை மீது இருந்து அருள் தரும் தணிகை மலையான் ஆன முருகப் பெருமான், தன்னுடைய பக்தர்களின் ஆசை, கோபம், நோய் போன்ற அனைத்தையும் தணித்து இன்பத்தை அருளக் கூடியதாக வேல் வகுப்பு பாடல் உள்ளது. வேல் வகுப்பு பாடல் "ப" என்ற எழுத்தில் துவங்கி, "லே"என்ற எழுத்தில் நிறைவடைவதால் இதை "பலே" வகுப்பு என்றும் சிலர் சொல்வார்கள். 16 பாடல்களைக் கொண்ட இந்த பதிகத்தின் வரிகளை முன்னும் பின்னுமாக படிக்கடி வடிவில் அமைத்து தான் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் வேல் மாறல் திருப்பதிகத்தை உருவாக்கினார். வேல் மாறலின் 64 பாடல்களைப் படிக்க முடியாதவர்கள் வேல் வகுப்பின் 16 பாடல்களைப் படித்தாலே முருகப் பெருமானின் அருளைப் பெற முடியும். இந்த பாடல்களை மனப்பாடம் செய்தாலே, எளிதாக வேல் மாறல் பாடல் முழுவதையும் படித்து விடலாம்.
வேல் வகுப்பு பாடல் வரிகள்
- பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி விழிக்குநிக ராகும்
- பனைக்கமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை தெறிக்கவர மாகும்
- பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை யிடித்துவழி காணும்
- பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல் ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள் புசிக்கவருள் நேரும்
- சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி தனக்கும்அரி தனக்குநரர் தமக்குகுறும் இடுக்கண்வினை சாடும்
- சுடர்பருதி ஒளிப்பநில வொழுக்குமதி ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர் ஒளிப்பிரபை வீசும்
- துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர் நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும் எனக்கோர்துணை யாகும்
- சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை யடுத்தபகை யறுத்தெறிய வுருக்கியெழு மறத்தைநிலை காணும்
- தருக்கிநமன் முருக்கவரின் இருக்குமதி தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை கழற்குநிக ராகும்
- தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்கவளை வாகும்
- தனித்துவழி நடக்குமென திடத்துமொரு வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு பகற்றுணைய தாகும்
- சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர் பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில் விருப்பமொடு சூடும்
- திரைக்கடலை யுடைத்துநிறை புனர்கடிது குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர நிறைத்துவிளை யாடும்
- திசைக்கரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்ததென முகட்டினிடை பறக்கவற விசைத்ததிர வோடும்
- சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி விழித்தலற மோதும்
- திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே