நம்முடைய வீட்டில் துடைப்பத்தை வாங்கும் நாள், வைக்கும் திசை என அனைத்தும் வாஸ்து சாஸ்திரத்தின்படி அமைந்தால் மகாலட்சுமி தேவியின் பரிபூரண அருளைப் பெறலாம். துடைப்பம் வாங்குவதற்கான சிறந்த மற்றும் தவிர்க்க வேண்டிய நாட்களை ஜோதிடம் மற்றும் வாஸ்து விதிகள் மூலம் விரிவாக அறிவோம்.
அதிர்ஷ்டத்தை தரும் துடைப்பம் - வாஸ்து முக்கியத்துவம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, துடைப்பம் வெறும் வீட்டை சுத்தம் செய்யக்கூடிய ஒரு பொருள் மட்டுமல்ல. அது அதிர்ஷ்டம் மற்றும் மகாலட்சுமியின் வடிவமாக கருதப்படுகிறது. துடைப்பத்தை சரியான முறையில் கையாள்வது, வாஸ்து விதிகளைப் பின்பற்றி வாங்குவதும், வைப்பதும் செல்வ செழிப்பை அதிகரிக்கும். தவறான நாட்களில் துடைப்பத்தை வாங்குவது அல்லது தவறான திசையில் வைப்பது நிதி இழப்புகளுக்கும், எதிர்மறை ஆற்றல்களுக்கும் வழிவகுக்கும்.
துடைப்பம் வாங்கக்கூடாத நாட்கள்
- திங்கட் கிழமை துடைப்பம் வாங்கக்கூடாது: வாஸ்து சாஸ்திரப்படி, திங்கட்கிழமை துடைப்பம் வாங்கினால் தன வரவு குறையும், பணம் வருவதற்கான வேலைகள் தடைப்படும். வீட்டில் எதிர்மறையான ஆற்றல் அதிகரித்து, கடன் மற்றும் செலவுகள் அதிகரிக்கலாம். இந்த நாளில் வீட்டை சுத்தம் செய்யக்கூடிய எந்த ஒரு பொருளையும் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
- சனிக்கிழமை அன்று துடைப்பம் வாங்கக்கூடாது: பொதுவாக சனிக்கிழமைகளில் எண்ணெய், உலோகப் பொருட்களை வாங்குவது அசுபமாக கருதப்படுகிறது. அதே வரிசையில் துடைப்பமும் இந்த நாளில் வாங்குவது பல பிரச்னைகளைத் தரக்கூடியது. மகாலட்சுமியின் அருள் கிடைக்க சனிக்கிழமையில் துடைப்பத்தை வாங்குவதை கட்டாயம் தவிர்க்கவும். இதனால் லட்சுமி மற்றும் சனி தேவரின் கோபத்தைச் சந்திக்க வேண்டி வரும்.
விளக்குமாறு வாங்க சிறந்த நாள், நேரம் எது?
வீட்டிற்காக புதிய துடைப்பம் வாங்க நினைப்பவர்கள், அதை வெள்ளிக்கிழமை அல்லது செவ்வாய்க் கிழமைகளில் வாங்குவது சிறந்தது. இதனால் உங்களுக்கு லட்சுமி தேவியின் நல்லருள் வாழ்வில் நிலைத்திருக்கும். மேலும், லட்சுமி தேவியின் அருள் நிறைந்திருக்கும் அட்சய திருதியை நாளில் கூட துடைப்பம் வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. முக்கியமான மத சடங்குகளின் போது துடைப்பம் வாங்குவது மிகவும் சாதகமற்றதாகக் கருதப்படுகிறது.
துடைப்பம் எங்கு வைக்க வேண்டும்?
உங்கள் வீட்டில் வளம் பெருகவும், ஆசை நிறைவேறவும், துடைப்பத்தை வீட்டின் வடமேற்கு அல்லது மேற்கு திசையில் வைப்பது நல்லது. இதனால் வீட்டில் நேர்மறை ஆற்றலும், லட்சுமி தேவியின் அருளும் கிடைக்கும். குறிப்பாக மேற்கு திசையில் வைப்பது எல்லா குறைகளையும் நீக்கி பிரச்னைகள் தீரும் என நம்பப்படுகிறது. கிழக்கு மற்றும் வட கிழக்கு திசையில் துடைப்பத்தை வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.