நம்முடைய ஆன்மிக வழிபாட்டில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது தீபவழிபாடு. முறையான பூஜை முறைகள், மந்திரங்கள் ஆகியவை தெரியவில்லை என்றாலும், காலை-மாலை இரண்டு வேளைகளில் தீபம் ஏற்றிவைத்து, அதற்கு நமஸ்காரம் செய்தாலே போதும். தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் ஸித்திக்கும் என்கின்றன ஞான நூல்கள். முருகப்பெருமானுக்கு உகந்த கார்த்திகை மாதம் என்பது தீப வழிபாட்டிற்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மாதத்தில் திருவிளக்கேற்றி வழிபடுவது மிகவும் விசேஷம்.
கார்த்திகை மாதம் முழுவதும் நாம் விளக்கேற்றி வழிபடலாம். அப்படி வாய்ப்பில்லாதவர்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது மிகவும் அவசியம். முதல் நாள் பரணி தீபத்தன்றும், அடுத்த நாள் கார்த்திகை தீபத்தன்றும், அதற்கு மறுநாளும் என மூன்று நாட்கள் விளக்கேற்ற வேண்டும். ஜோதிட ரீதியாகவும் இந்த தீப வழிபாடு மிகுந்த பலன்களைத் தரும்.
திருக்கார்த்திகை தீபத்திற்கு 27 விளக்குகள் எங்கு ஏற்ற வேண்டும்?
கார்த்திகை மாதத்தில், நமது வீடுகளில் 27 இடங்களில் தீபங்கள் ஏற்றிவைக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறது. இந்த 27 என்ற எண், 27 நட்சத்திரங்களைக் குறிக்கிறது. அவை எந்தெந்த இடங்கள், எந்தெந்த இடங்களில் எத்தனை தீபங்கள் ஏற்றுவது என்பது குறித்து விரிவாகக் காணலாம்:
- வீட்டு முற்றத்தில் 4 விளக்குகள்
- சமையல் கூடத்தில் 1 விளக்கு
- நடையில் 2 விளக்குகள்
- வீட்டின் பின்புறம் 4 விளக்குகள்
- திண்ணையில் 4 விளக்குகள்
- மாட குழியில் 2 விளக்குகள்
- நிலைப்படிக்கு 2 விளக்குகள்
- சாமி படத்துக்கு கீழே 2 விளக்குகள்
- வெளியே யம தீபம் 1 விளக்கு
- திருக்கோலம் இட்ட இடத்தில் 5 விளக்குகள்
மொத்தம் 27 விளக்குகள் ஏற்ற வேண்டும். ஆனால், அபார்ட்மென்ட் மற்றும் மாடி வீடுகள் அதிகம் உள்ள தற்காலத்தில், மேற்சொன்ன முறைப்படி விளக்கு ஏற்ற முடியாத சூழலில், வசதிக்கு ஏற்ப வீட்டுக்குள்ளேயும் வெளியிலுமாக 27 விளக்குகளை ஏற்றிவைக்கலாம். இதனால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும். 27 வைக்க முடியாதவர்கள் குறைந்தது 9 விளக்குகள் கட்டாயம் ஏற்ற வேண்டும். வீடு முழுவதும் ஏற்ற முடியாவிட்டாலும் நிலை வாசல் மற்றும் பூஜை அறையில் கண்டிப்பாக இரண்டு விளக்குகளாவது ஏற்ற வேண்டும்.
தீபம் ஏற்ற உகந்த நேரம் மற்றும் முறை
- பிரம்ம முகூர்த்தம்: அதிகாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை விளக்கேற்றினால் நன்மைகள் பெருகும்.
- மாலை வேளை: மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை தீபம் ஏற்றுவது சிறப்பு.
- பிரதோஷ வேளை: மாலை 4.30 - 6.00 மணி வரை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும். இது போன்ற தமிழ் ஜோதிட நம்பிக்கைகள் நமது கலாச்சாரத்தின் ஒரு அங்கம்.
- தீபம் ஏற்றும் பொருள்: களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்ற வேண்டும். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.
- விளக்கு வைக்கும் முறை: தீபம் வைக்கும்போது கண்டிப்பாக சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய வாழை இலையை கீழே வைத்து அதன் மீது விளக்கு வைக்க வேண்டும். வாழை இலைக்கு பதில் பசு சாணம் கூட வைக்கலாம்.