மகாவிஷ்ணுவின் ஐந்தாவது அவதாரமான வாமன அவதாரத்தை போற்றும் விதமாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை மற்றும் திருவோண விரதத்தின் சிறப்புகள், கடைபிடிக்கும் முறைகள், மற்றும் அதன் மூலம் கிடைக்கும் பலன்கள் பற்றி விரிவாக இந்த பதிவில் ஜோதிடம்360 மூலம் அறியலாம்.
ஓணம் பண்டிகையின் சிறப்புகள்
ஓணம் பண்டிகை என்பது மகாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தை போற்றும் ஒரு திருநாளாகும். புரட்டாசி மாதத்தில் (சில சமயம் ஆவணியிலும்) வரும் துவாதசி அன்று வாமனர் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. இதற்கு மறுநாள், மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்று அடி நிலம் கேட்டு, தனது திருவடியால் அவரை பாதாளலோகத்திற்கு அனுப்பியதாக நம்பப்படுகிறது. பெருமாள் மகாபலிக்கு வரமளித்து, ஆண்டுதோறும் அவர் தனது நாட்டு மக்களை காண பூமிக்கு திரும்பி வரும் திருவோண நட்சத்திர திருநாள் தான் ஓணம் பண்டிகையாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஓணம் கொண்டாட்ட தத்துவம்
ஓணம் பண்டிகை மகாபலி மன்னனை வரவேற்பதற்காக மட்டுமல்லாமல், வாமன அவதாரத்தை போற்றி, மகாவிஷ்ணுவை நம்முடைய வீட்டில் எழுந்தருளச் செய்து, அவரது அருளை வேண்டி கொண்டாடப்படும் ஒரு அற்புதமான திருநாளாகும். மனித உருவில் பெருமாள் எடுத்த முதல் அவதாரம் வாமன அவதாரம். இது மகாபலியை அழிப்பதற்காக அல்ல, தனது தீவிர பக்தனான மகாபலியை ஆட்கொண்டு அருள் செய்வதற்காகவே எடுக்கப்பட்டது. எனவே, ஓணம் அன்று வாமனரை வழிபட்டால், நமது பக்தியையும் ஏற்று பெருமாள் நமக்கும் அருள் புரிவார் என்பதை உணர்த்தும் நாள் இது. பெருமாளையும், மகாலட்சுமியையும் வீட்டிற்கு அழைக்கும் விதமாகவே வீடுகள் அலங்கரிக்கப்பட்டு, விதவிதமான உணவுகள் படைக்கப்படுகின்றன.
வாமனரை வழிபடும் முறை
வாமன ஜெயந்தி அன்றும், ஓணம் திருநாளன்றும் பெருமாளை வழிபடுவது மிகச் சிறப்பானது. பூஜை அறையில் ஒரு மனை பலகையில் மஞ்சள் நிற வஸ்திரம் விரித்து, அதில் வாமனர் அல்லது பெருமாளின் படம்/விக்ரகத்தை வைத்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். ஏதாவது இனிப்பு நைவேத்தியமாக படைத்து பூஜை செய்ய வேண்டும். வாமனரை வழிபடுவதன் மூலம் அனைத்து விதமான பாவங்களில் இருந்தும் விடுபட முடியும். மேலும், மோட்சமும் கிடைக்கும். ஏகாதசிக்கு இணையான பலன் தரக்கூடிய மிக உன்னதமான விரதமாக திருவோண விரதம் கருதப்படுகிறது. குறிப்பாக வாமனர் அவதரித்த நாளில் அவரை வேண்டி விரதம் இருப்பது மிகவும் சிறப்பானது.
திருவோண விரத சிறப்புகள்
- பெருமாளுக்கு மிகவும் பிடித்தமான நட்சத்திரமாக திருவோணம் நட்சத்திரம் சொல்லப்படுகிறது.
- திருவோணம் நட்சத்திரம் வரும் நாட்களில் பெருமாளை விரதம் இருந்து வழிபடுவதால் பரிபூரண அருள் கிடைக்கும்.
- இந்த விரதம் இருந்தால் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கி, செல்வ செழிப்பு ஏற்படும்.
- வாழ்க்கையில் நிச்சயம் ஒரு திருப்பம் ஏற்படும்.
- ஒரு முறை இந்த விரதத்தை கடைபிடித்தாலே சகல சௌபாக்கியங்களும், மன அமைதியும் உண்டாகும்.
- பலவிதமான சிக்கல்களில் தவிப்பவர்கள் திருவோண விரதம் இருந்தால் பெருமாளின் அருளால் வாழ்வில் பெரிய மாற்றம் வரும்.
திருவோண விரத முறை
- மாதந்தோறும் திருவோண நட்சத்திரம் வரும் நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி, சுத்தமான ஆடைகளை அணிந்து, பெருமாளை பக்தியுடன் வழிபட வேண்டும்.
- முடிந்தால் உபவாசமாக (உண்ணாவிரதம்) இருக்கலாம்.
- அன்றைய தினம் பெருமாளின் மந்திரங்கள் மற்றும் வாமனருக்குரிய மந்திரங்களைச் சொல்லி வழிபட வேண்டும்.
- மனம் ஒன்றி பெருமாளை வேண்டி, ஏகாதசி விரதம் கடைபிடிப்பது போல் விரதம் இருக்க வேண்டும்.
- விரதம் இருக்க முடியாதவர்கள் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று, தாமரை மலர், துளசி படைத்து வழிபடலாம்.
- மாலையில் வீட்டில் நெய் விளக்கேற்றி வழிபடுவதால் மகிழ்ச்சியான, நிறைவான வாழ்க்கை அமையும்.
வாமன மந்திரங்கள்
வாமனரை வழிபடும் போது இந்த மந்திரங்களைச் சொல்லலாம்:
- 1. "ஓம் தவ ரூப்பாயா வித்மஹே ஸ்ருஷ்டி க்ரத்தாய தீமஹி தந்நோ வாமன ப்ரேசாதயாத்"
- 2. "ஓம் வாமனாய நமஹ"
- 3. "ஓம் பகவதே வாமனாய நமஹ"
இந்த மந்திரங்களை 108 முறை சொல்லலாம். இயலாதவர்கள் "ஓம் நமோ நாராயணா" என்ற மந்திரத்தை சொல்லலாம். வாமன மந்திரத்தை தொடர்ந்து சொல்லுவதால் ஆணவம், அகந்தை அழிந்து, இறைவனை சரணடையும் மனப்பக்குவம் ஏற்படும். முழுவதுமாக சரணடைந்த பக்தர்களுக்கு பெருமாளின் அருள் மிக விரைவாக கிடைக்கும். இது ஜோதிட ரீதியாகவும் மன அமைதியை தரும்.