சருமப் பராமரிப்பில், உடலில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவது மிக முக்கியமான ஒன்று. வேக்ஸிங், ஷேவிங் போன்ற முறைகளைத் தவிர்த்து, இயற்கையான முறையில் வீட்டிலேயே தேவையற்ற முடிகளை நீக்க உதவும் சிறந்த வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
இயற்கை முறையில் தேவையற்ற முடி நீக்கும் வழிகள்:
தேவையற்ற முடிகளை நீக்க பல்வேறு வேதியியல் முறைகள் இருந்தாலும், இயற்கை வைத்தியங்கள் பக்க விளைவுகள் இல்லாதவை. அவற்றை விரிவாகக் காண்போம்.
ஐஸ் பேக்
வேக்ஸிங் செய்த பிறகு முடியின் வளர்ச்சியைத் தடுக்க ஐஸ் பேக் உதவும். ஒரு மென்மையான துணியில் ஐஸ் கட்டிகளை வைத்து, சருமத்தின் மேல் வைத்து மசாஜ் செய்யுங்கள்.
வெந்நீர் ஒத்தடம்
வேக்ஸிங் செய்த பிறகு சருமத்தின் சொரசொரப்பைக் குறைக்கவும், முடி வளர்ச்சியைத் தடுக்கவும் வெந்நீர் ஒத்தடம் உதவும். டர்க்கி டவலை வெந்நீரில் முக்கி பிழிந்து, வேக்ஸிங் செய்த இடங்களில் ஒற்றி எடுங்கள்.
அரிசி மாவு ஸ்கிரப்
ஒரு பௌலில் அரிசி மாவுடன் தயிர், மஞ்சள் பொடி சேர்த்து பேஸ்ட்டாக கலந்து தேவையற்ற முடிகள் உள்ள பகுதிகளில் ஸ்கிரப் செய்யுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை இதைச் செய்ய, இறந்த செல்கள் நீங்கி சருமம் மென்மையாகும்.
பாதாம் ஸ்கிரப்
கொரகொரப்பாக பொடி செய்த பாதாமுடன் தயிர் சேர்த்து மிக்ஸ் செய்து சருமத்தில் ஸ்கிரப் செய்யுங்கள். இது தேவையற்ற முடிகளை நீக்குவதோடு, வைட்டமின் ஈ மற்றும் லாக்டிக் அமிலம் சருமத்தை மென்மையாக்கும்.
பாதாம் ஆயில் - உப்பு
2 ஸ்பூன் பாதாம் ஆயிலுடன் சிறிது உப்பு சேர்த்து ஸ்கிரப் போல அப்ளை செய்து தேய்த்து வர, முடி வளர்ச்சியைத் தடுப்பதோடு இறந்த செல்களை நீக்கி சருமத்தை மென்மையாக்கும்.
சர்க்கரை பேஸ்ட்
3 ஸ்பூன் சர்க்கரையுடன் 2 ஸ்பூன் சூரியகாந்தி எண்ணெய் கலந்து, முடி வளர்ச்சி அதிகமுள்ள இடங்களில் வட்ட வடிவில் ஸ்கிரப் செய்யுங்கள். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.
சிட்ரஸ் தோல் ஸ்கிரப்
எலுமிச்சை அல்லது ஆரஞ்சு தோலை கொரகொரப்பாக அரைத்து, பாதாம் பொடி, ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து ஸ்கிரப் செய்ய சருமம் பளபளப்பாக மாறும், முடி வளர்ச்சியும் தடுக்கப்படும்.
ஓட்ஸ் ஸ்கிரப்
ஓட்ஸ் பொடியுடன் முட்டையின் வெள்ளைக்கரு, தேன் சேர்த்து கலந்து சருமத்தில் அப்ளை செய்யுங்கள். 15 நிமிடங்கள் கழித்து தண்ணீர் தெளித்து மென்மையாக ஸ்கிரப் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இது இறந்த செல்களை நீக்கி சருமத்தை மென்மையாக்கும்.
இந்த இயற்கை வைத்தியங்கள் தேவையற்ற முடியை நீக்குவதோடு, சருமத்தை மென்மையாக்கி, ஸ்கின் டோனை மேம்படுத்தும். எதைப் பயன்படுத்தினாலும், பயன்படுத்திய பிறகு சருமத்தை நன்கு கழுவிவிட்டு மறக்காமல் மாய்ஸ்ச்சரைஸர் அப்ளை செய்ய வேண்டும். பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை வெறும் தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத்தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு Jothidam360 பொறுப்பாகாது.