இந்து சமயத்தில் நாகங்களை வழிபடுவது தொன்றுதொட்டு வரும் வழக்கம். திருமால் பாம்பு படுக்கையாகவும், சிவபெருமான் நாகத்தை தன் கழுத்திலும் கொண்டுள்ளார். அம்பாள், விநாயகர் என தெய்வங்கள் நாகத்தை ஏதேனும் ஒரு வகையில் தங்களின் சன்னதியில் இணைத்துள்ளனர். ஜோதிடத்தில் ராகு-கேது என நவகிரகங்களில் அமைந்து, நம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நாக பஞ்சமி தினத்தில் நாக தேவதைகளை வழிபட்டு, தோஷங்களை நீக்கும் பரிகாரங்களை மேற்கொள்வது சிறப்பு. இந்த ஆண்டு நாக பஞ்சமி ஆகஸ்ட் 9, 2024 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
நாக பஞ்சமி என்றால் என்ன?
நாக பஞ்சமி 2024 ஆகஸ்ட் 9ம் தேதி வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. அன்று அதிகாலையில் எழுந்து குளித்து சுத்தமாகி, விரதம் இருந்து நாகத்தை வழிபாடு செய்ய வேண்டிய நாள். அன்றைய நாளில் மஞ்சள், குங்குமம், பால், வெள்ளை நிற பூக்களுடன் நாக தெய்வத்திற்கு காணிக்கையாகப் படைத்து வழிபாடு செய்ய வேண்டும். அதோடு பால், நெய்யுடன் சர்க்கரை கலந்து படைக்கலாம். நாக தேவர் சன்னதியில் விளக்கேற்றி மனதார வழிபாடு செய்ய நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறுவதோடு, நம் மனக்குறைகள் நீங்கும். ஜோதிட ரீதியாக, இது ராகு-கேது தோஷ நிவர்த்திக்கு மிகவும் உகந்த நாள்.
12 ராசிகளுக்கான நாக பஞ்சமி பரிகாரங்கள்
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்
- மேஷ ராசி: பாம்பு உருவம் பதித்த செப்பு உலோகத் தகட்டை ஓடும் நீரில் விடவும். இதனால் ராகு தோஷம் பாதிப்பு குறையும்.
- ரிஷப ராசி: அனைத்து கவலைகளும், தடைகளும் விலக, நாக தேவதைகளை நினைத்து ஓடும் நீரில் தேங்காயை விடுவது நன்மை தரும்.
- மிதுன ராசி: ஏழை எளியவர்களுக்கும், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், காய்கறி மற்றும் பழங்களை வழங்குவது நன்மை தரும்.
- கடக ராசி: சர்பதோசம், ராகு தோஷம் பாதிப்பு குறைய, செப்பு தகட்டில் செய்யப்பட்ட சிறு பாம்பு உருவத்தை ஓடும் தண்ணீரில் விட வேண்டும்.
சிம்மம் முதல் விருச்சிகம் வரை
- சிம்ம ராசி: கணபதி வழிபாடு செய்வது நன்மை தரும். விநாயகருக்கு அறுகம்புல் அர்ச்சனை செய்யவும். துர்க்கை அம்மனுக்கு லட்டு அர்ச்சனை செய்து விநியோகிக்கவும்.
- கன்னி ராசி: ராகு மற்றும் கேதுவின் தோஷ நிவர்த்திக்காக நாகர் சிலைக்கு மஞ்சள் பூக்களால் அர்ச்சனை செய்யவும்.
- துலாம் ராசி: ராகு - கேது தோஷ நிவர்த்திக்காக வறுத்த கோதுமை மாவுடன் சர்க்கரை கலந்து எறும்புகளுக்கு உணவாக தூவி விடவும்.
- விருச்சிக ராசி: எட்டு விதமான உலோகங்களால் செய்யப்பட்ட வளையல்கள் அணிவது நல்லது.
தனுசு முதல் மீனம் வரை
- தனுசு ராசி: சிவலிங்கத்திற்கு பாலபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபாடு செய்யவும்.
- மகர ராசி: 11 தேங்காய்களை வாங்கி நாக வழிபாடு செய்து ஓடும் நீரில் விடுவது நன்மை தரும்.
- கும்ப ராசி: 500 கிராம் நிலக்கரியை ஓடும் நீரில் விடுவது நன்மை தரும். முடிந்தால் ஒரு துண்டு நிலக்கரியையாவது விடவும். இதனால் உங்கள் வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கும். ஏழரை சனியின் தக்கம் குறையும்.
- மீன ராசி: தேங்காயைத் துருவி, அதை வறுத்த கோதுமை மாவு, சர்க்கரை, சிறிது உலர் பழங்களைப் போட்டு பக்தர்களுக்கு கொடுக்கவும்.