உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு தமிழ் மக்களிடையே அதிகரித்து வருகிறது. நமது பாரம்பரிய மருத்துவ முறைகளில் இருந்து பெறப்பட்ட ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் ஜோதிட ரீதியான பலன்களுக்கும், ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் அடிப்படையாக அமைகின்றன. காலை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளும் உணவானது நம் உடலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பாரம்பரிய மற்றும் நவீன மருத்துவ வல்லுநர்கள் ஆரோக்கியமான காலை உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்கள். இந்த பதிவில், நெல்லி - முருங்கை ஷாட் வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளையும், அதை தயாரிக்கும் முறையையும் விரிவாகக் காண்போம்.
நெல்லி - முருங்கை ஷாட் வெறும் வயிற்றில் குடிப்பதன் நன்மைகள்
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த நெல்லி - முருங்கை ஷாட்டை குடிப்பதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். இது உச்சந்தலை முதல் கல்லீரல் வரை அத்தனை உறுப்புகளையும் பாதுகாக்கும் திறன் கொண்டது.
செரிமானத்தை மேம்படுத்தும்
இந்த ஷாட் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கும் போது செரிமான மண்டலம் சீராக செயல்படும். செரிமான சக்தி அதிகரிக்கும். ஜீரணக் கோளாறு பிரச்சினைகள் ஏதேனும் இருந்தால் சரியாகும். குறிப்பாக குடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றி டீடாக்ஸ் செய்யும். மலம் கழிப்பதில் இருக்கும் சிரமங்கள் குறையும்.
நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. கறிவேப்பிலையிலும் ஓரளவு வைட்டமின் சி இருக்கிறது. முருங்கை இலையில் இல்லாத சத்துக்களே கிடையாது. அதிலும் இரும்புச்சத்தும் கால்சியமும் மிக அதிகம். அதோடு ஜிங்க், வைட்டமின் ஏ ஆகிய அத்தனையும் சேர்ந்து நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். அதன்மூலம் இந்த மழைக்காலத்தில் ஏற்படும் நோய்த்தொற்றுக்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கும்.
சருமப் பொலிவு கிடைக்கும்
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி சருமத்திற்கு தேவையான கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. அதோடு இவற்றில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் சருமத்தில் உள்ள இறந்த செல்கள், டாக்சின்களை வெளியேற்றி கரும்புள்ளிகளை மறையச் செய்து பளபளப்பாக மாற்றச் செய்கிறது.
ரத்த சர்க்கரை கட்டுப்பாடு
நெல்லிக்காய், முருங்கைக்கீரை, கறிவேப்பிலை மூன்றுமே குளுக்கோஸ் அளவை ஒழுங்குபடுத்தும் தன்மை கொண்டது. இது ரத்த சாக்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். குறிப்பாக காலை உணவுக்குப் பின் அதிகரிக்கும் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
பிற நன்மைகள்
- முடி வளர்ச்சி: நெல்லிக்காயில் உள்ள அமினோ அமிலங்களும் மினரல்களும் முடியின் வேர்க்கால்களை நன்கு வலுவாக்கும். அதோடு பொடுகு பிரச்சினையைப் போக்கும்.
- கல்லீரல் ஆரோக்கியம்: காலை வெறும் வயிற்றில் குடித்து வரும்போது கல்லீரலை பலப்படுத்தி, டீடாக்ஸ் செய்யும். கல்லீரல் கழிவுகளை வெளியேற்றி செயல்பாட்டை அதிகரிக்கச் செய்யும்.
- இதய ஆரோக்கியம்: இந்த நெல்லி முருங்கை ஷாட் கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
- சுறுசுறுப்பு: தினமும் இந்த ஜூஸை குடித்து வந்தால் சோர்வு நீங்கி நாள் முழுக்க உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
நெல்லிக்காய் - முருங்கைகீரை ஜூஸ் செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்
- நெல்லிக்காய் - 2
- முருங்கைக் கீரை - ஒரு கொத்து, (அல்லது) முருங்கை இலை பொடி - 1 ஸ்பூன்
- சீரகம் - கால் ஸ்பூன்
- மிளகு - 6
- கறிவேப்பிலை - 1 கொத்து
- பிங்க் சால்ட் - கால் ஸ்பூன்
- மஞ்சள் - 2 சிட்டிகை
- இஞ்சி - அரை இன்ச்
நெல்லி - முருங்கை ஷாட் செய்முறை
- முதலில் இஞ்சியை தோல் சீவி, கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.
- ஒரு மிக்ஸி ஜாரில் நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.
- அதில் முருங்கை இலை மற்றும் கறிவேப்பிலை இலைகளைக் கழுவி சேர்த்துக் கொள்ளுங்கள். முருங்கை இலை இல்லையென்றால் பொடி சேர்த்துக் கொள்ளலாம்.
- அதோட சீரகம், மிளகு, மஞ்சள், தோல் சீவிய இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- இந்த கலவையை ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
- இதை ஒரு ஃபில்டரில் போட்டு நன்கு வடிகட்டி திக்கான ஜூஸாக எடுத்துக் கொள்ளுங்கள்.
- இதில் 2 சிட்டிகை அளவு பிங்க் சால்ட் சேர்த்து கலந்தால் நெல்லி - முருங்கை ஷாட் ரெடி. அதை அப்படியே குடிக்க வேண்டியது தான்.
- குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால் இதில் சிறிது தேன் கலந்து கொடுக்கலாம்.
மேலே குறிப்பிட்ட இத்தனை நன்மைகளும் இந்த ஜூஸில் உண்டு. சொல்லப்போனால் உச்சந்தலை முதல் கல்லீரல் வரைக்கும் அத்தனை உறுப்புகளையும் பாதுகாக்கும்.