Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

முருகப்பெருமானின் அறுபடை வீடுகள்: பெயர் காரணம் மற்றும் ஆன்மீக முக்கியத்துவம்

தமிழர்களின் வாழ்வில் முருகப் பெருமான் மற்றும் அவரது அறுபடை வீடுகள் ஒரு முக்கிய அங்கம் வகிக்கின்றன. இந்த அற்புதமான முருகன் ஆலயங்கள் உருவானதன் பின்னணியில் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் கதைகளாகச் சொல்லப்படுகின்றன. ஒவ்வொரு படைவீடும் மனித உடலில் உள்ள ஆறு சக்கரங்களுடன் தொடர்புடையது என்பது அதன் ஆன்மீக முக்கியத்துவத்தை மேலும் உணர்த்துகிறது. குண்டலினியில் உள்ள இந்த ஆறு சக்கரங்களும் பக்தியால் மேல் எழும்பும்போது அஞ்ஞானம் அகன்று, ஞானம் என்னும் தெய்வீக நிலையை அடைய முடியும் என்பதை இந்த ஆறுபடை வீடுகள் நமக்கு உணர்த்துகின்றன. இந்த ஆழமான ஜோதிட மற்றும் ஆன்மீக உண்மைகளை அறிய, இக்கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளும், அவற்றின் பெயர் காரணமும்

இப்போது, முருகப்பெருமானின் ஒவ்வொரு அறுபடை வீடுகளின் பெயர் காரணத்தையும், அதன் பின்னணியில் உள்ள கதைகளையும் தெரிந்து கொள்வோம். இவை ஒவ்வொன்றும் தமிழ் கலாச்சாரத்திலும், ஜோதிட ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

1. திருப்பரங்குன்றம்

முருகப் பெருமானின் முதல் படைவீடு திருப்பரங்குன்றம். முருகப் பெருமான், இந்திரனின் மகள் தெய்வாணையை இந்தத் தலத்தில் தான் திருமணம் செய்து கொண்டதாக புராணங்கள் சொல்கின்றன. பரம்பொருளான சிவபெருமான், குன்றம் என்னும் மலை வடிவாகக் காட்சி அளிக்கும் இடம் திருப்பரங்குன்றம் ஆகும். (திரு+பரம்+குன்றம்) பரம் என்றால் பரம்பொருளான சிவபெருமான். குன்றம் என்றால் குன்று (சிறிய மலை), திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழி. இது மூலாதார சக்கரத்தை குறிக்கிறது.

2. திருச்செந்தூர்

முருகப் பெருமானின் இரண்டாவது படை வீடு திருச்செந்தூர். சூரபத்மனை வெற்றி கொண்டதால் இங்கு கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் "ஜெயந்திநாதர்" என்று அழைக்கப்படுகிறார். அதுவே பின்னாளில் மருவி "செந்தில்நாதர்" என்று ஆனது. அது போலவே இந்த ஊரும் "திருஜெயந்திபுரம்" என்பதிலிருந்து மருவி திருச்செந்தூர் என்று ஆனதாகச் சொல்லப்படுகிறது. முருகன் சிவந்த நிற மேனியை உடையவர் என்பதால் செந்தில் என்ற பெயர் ஏற்பட்டதாகவும், சிவந்த நிற தெய்வமான முருகன் வசிக்கும் ஊர் என்பதால் இது திருச்செந்தூர் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்லப்படுவது உண்டு. இது சுவாதிஷ்டான சக்கரத்தை குறிக்கிறது.

3. பழநி

மாம்பழத்திற்காக கோபம் கொண்டு வந்த முருகப் பெருமானை சிவனும், பார்வதியும், இந்த திருத்தலத்திற்கு வந்து "ஞானப் பழம் நீ" என்று முருகனுக்குப் பெயர் சூட்டி அழைத்தனர். நாளடைவில் இதுவே மருவி பழநி என்று ஊர் பெயர் வர காரணமாயிற்று. முருகப்பெருமானின் இந்த தலம் மணிப்பூரக சக்கரத்தை குறிப்பதாகும்.

4. சுவாமிமலை

இறைவனான சிவபெருமானுக்கே முருகப் பெருமான், குருவாக இருந்து ஓம் என்னும் பிரணவ மந்திரத்திற்கு பொருளை உபதேசித்தார். இதனால் முருகப் பெருமானை சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன்சாமி என்றும் போற்றுகின்றனர். அதனாலேயே இந்த தலமும் சுவாமிமலை என்று பெயர் பெற்றது. இந்த திருத்தலம் அனாகத சக்கரத்தை குறிக்கிறது.

5. திருத்தணி

சூரனை வதம் செய்த பிறகு சினம் தணிந்து, வள்ளியுடன் சாந்த சொரூபமாக முருகப் பெருமான் வந்து அமர்ந்த இடம் தான் திருத்தணி. சினம் தணிந்த இடம் என்பதால் திருத்தணிகை என இந்த தலம் அழைக்கப்படுகிறது. பிறகு அதுவே மருவி திருத்தணி என்றாகியது. திருத்தணி விசுத்தி சக்கரத்தை குறிக்கும் முருகன் ஆலயமாகும்.

6. பழமுதிர்சோலை

மலைக்குரிய கடவுளாகிய முருகப் பெருமானுக்குரிய இம்மலை இயற்கை வளத்தால் பசுங்காடும், சோலையும் நிறைந்து, காண்பவர் கண்களுக்குப் பசுந்தழைகளால் போர்த்தப்பட்டு இனிய தோற்றத்துடன் காணப்பட்டதால் சோலை மலையாயிற்று. பழமுதிர்ச்சோலை எனும் இத்தலப் பெருக்கு பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை எனவும் பொருள் கொள்ளலாம். இந்த அறுபடை வீடு ஆக்கினை சக்கரத்தை குறிக்கிறது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் எனப்படும் ஆறு முக்கிய ஆலயங்கள் உள்ளன. அவை திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, மற்றும் பழமுதிர்சோலை.

திருப்பரங்குன்றம் - மூலாதாரம், திருச்செந்தூர் - சுவாதிஷ்டானம், பழநி - மணிப்பூரகம், சுவாமிமலை - அனாகதம், திருத்தணி - விசுத்தி, பழமுதிர்சோலை - ஆக்கினை ஆகிய ஆறு சக்கரங்களை இந்த முருகன் ஆலயங்கள் குறிக்கின்றன.

சுவாமிமலையில், முருகப்பெருமான் தனது தந்தை சிவபெருமானுக்கே பிரணவ மந்திரத்தின் பொருளை குருவாக இருந்து உபதேசித்ததால், அவர் தகப்பன்சாமி என்று பக்தர்களால் போற்றப்படுகிறார்.

Our Other Services