கந்த சஷ்டி விரதம் என்பது முருகப் பெருமானின் அறுபடை வீடுகள் மற்றும் அனைத்து முருகன் ஆலயங்களிலும் பக்தர்களால் சிறப்புடன் அனுஷ்டிக்கப்படும் ஒரு சக்திவாய்ந்த விரதமாகும். சூரபத்மனை சம்ஹாரம் செய்து முருகன் வெற்றி பெற்ற நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்த உன்னத விரதத்தின் மகிமையையும், அதன் வழிபாட்டு முறைகளையும், பயன்களையும் இந்த ஜோதிடம்360 கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
கந்த சஷ்டி விரதத்தின் முக்கியத்துவம்
ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி அன்றுதான் முருகப் பெருமான் சூரபத்மனை அழித்து, அறத்தை நிலைநாட்டிய நாள். ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும் அழித்து, அசுர சக்திகளை நீக்கிய கலியுக வரதனான முருகப் பெருமானின் உன்னத நாளே கந்த சஷ்டியாகும். இந்த விரதம் பக்தர்கள் தங்கள் தீய குணங்களை நீக்கி, தெய்வ குணங்களை வளர்க்க உதவுகிறது.
கந்த சஷ்டி விரத அனுஷ்டானங்கள்
ஐப்பசித் திங்கள் சதுர்த்தசித் திதியில் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாட்களும் கந்தப் பெருமானை நினைத்து வழிபட்டு விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து, இளநீர் குடித்து அல்லது ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் முருகன் ஆலயங்கள் சென்று சங்கல்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்குவார்கள்.
முருகப் பெருமானின் முக்கிய விரதங்கள்
முருகனுடைய விரதங்களுள் கந்த சஷ்டி விரதம், கார்த்திகை விரதம், வெள்ளிக் கிழமை விரதம் ஆகிய மூன்றும் பிரதானமானவையாகும்.
- கந்த சஷ்டி விரதம்: தொடர்ந்து ஆறு வருடங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது.
- கார்த்திகை விரதம்: பன்னிரெண்டு வருடங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது.
- வெள்ளிக்கிழமை விரதம்: மூன்று வருடங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்த விரதங்கள் ஜோதிடம் ரீதியாகவும் பக்தர்களுக்கு நன்மைகளைத் தருகின்றன.
மும்மலங்களையும், ஆறுவகை எதிரிகளையும் வெல்லும் விரதம்
அசுர சக்திகளின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை மட்டுமன்றி, காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், பெருமை ஆகிய ஆறுவகை எதிரிகளையும் அழித்து, முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலைநாட்டியதால் கந்த சஷ்டி விரதமே பெருவிழாவாக எடுக்கப்படுகின்றது.
சூரன், சிங்கன், தாரகன் முதலிய அசுரர்கள் நெடுங்காலமாக தேவர், மனிதர் யாவரையும் துன்புறுத்தி அழித்து வந்தனர். பரமசிவன் இதற்கொரு முடிவு காணும் நோக்கில், தனது சக்தியையே முருகப் பெருமானாகப் பிறப்பித்தார். அந்த முருகப் பெருமான் இந்த சூரபதுமாதி அசுரர்களுடன் ஆறு நாட்கள் போரிட்டு வென்றார். இந்த அருட் பெருங்கருணைச் செயலை வியந்து இப்போர் நிகழ்ந்த காலமாகிய ஐப்பசி மாத வளர்பிறை முதல் ஆறு நாட்களையும் விரத நாட்களாகக் கொண்டு முனிவரும் தேவரும் நோற்று வந்தனர். இதுவே கந்த சஷ்டி என்ற பேரில் பூலோக மாந்தரும் அனுஷ்டிக்கக் கிடைத்தது.
கந்த சஷ்டி விரதத்தின் அற்புதப் பயன்கள்
இவ்விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப் பாராயணம் செய்வதால், என்னவென்று சொல்ல முடியாத சாந்தி, மனஅமைதி, நிலவும். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர். சஷ்டி விரத ஆறு நாட்களும் கந்தப் பெருமான் எழுந்தருளியுள்ள ஆறுபடை வீடுகள் உட்பட அனைத்து முருகன் ஆலயங்களில் எல்லாம் பூரண கும்பம் வைத்து விஷேட அபிஷேகமும், சண்முகார்ச்சனையும், கந்த புராணப்படிப்பும் நடைபெறும்.
விரதம் முடிவுற்ற அன்று முருகன் ஆலயத்தில் சூரன் போர் நடைபெற்று, மறுநாள் விரதம் அனுஷ்டித்த அனைவரும் விரத பூஜையை நிறைவு செய்கின்றனர். பாரணை பண்ணும் அன்று ஆறு பேருக்கு அன்னதானம் வழங்கி உட்கொள்ள வேண்டும். இந்த தமிழ் கலாச்சார விரதமானது பல தலைமுறைகளாக பின்பற்றப்பட்டு வருகிறது.