கால பைரவர் வழிபாடு என்பது அஷ்டமி திதியில் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த வழிபாடு தீய சக்திகளை நீக்கி, கிரக தோஷங்களை அகற்றி, வாழ்வில் அனைத்து நன்மைகளையும், செல்வ செழிப்பையும் தரும். ஜோதிட ரீதியாகவும், தெய்வீக ரீதியாகவும் கால பைரவர் வழிபாடு சிறப்பானது.
கால பைரவர் யார்?
காலத்தின் தெய்வமாகவும், ஆலயங்களின் காவல் தெய்வமாகவும், சிவ சொரூபமாகவும் விளங்குபவர் கால பைரவர். இவரை அஷ்டமி திதியில் வழிபட்டால் நமக்கு எதிராக செயல்படும் கோள்கள் கூட நமக்கு சாதகமாக செயல்பட்டு, நன்மைகளை வழங்க துவங்கும். நேரம் சரியில்லை, தலைவிதி சரியில்லை என்பவர்கள் கூட அஷ்டமி திதியில் விரதம் இருந்து கால பைரவரை வழிபட்டால் அனைத்து விதமான நன்மைகளும் நடக்க துவங்கும். கேட்டது கிடைக்கும்.
அஷ்டமி திதி வழிபாட்டு முறைகள்
தேய்பிறை அஷ்டமியில் ராகு காலத்தில் கால பைரவரை வழிபடுவது மிகவும் சிறப்பு. அது தவிர அனைத்து அஷ்டமிகளிலும் பைரவருக்கு விரதம் இருந்து வழிபடுவது சிறப்பு.
பைரவருக்கு அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும். இலுப்பை எண்ணை, விளக்கு எண்ணை, தேங்காய் எண்ணை, நல்லெண்ணெய், பசு நெய் இவற்றினை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்றலாம்.
நம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் சொர்ண ஆகர்ஷண பைரவர், பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள்.
அஷ்டமி திதி வரும் நாளில் பைரவருக்கு செவ்வரளி மலர்கள் சூட்டி, வடை மலை சாற்றி, தயிர் சாதம் நைவேத்தியமாக படைக்க வேண்டும். பிறகு நெய் தீபம் ஏற்றி, கால பைரவர் அஷ்டகத்தை படிக்க வேண்டும். ராகு காலத்தில் இந்த வழிபாட்டினை செய்வது மிகவும் சிறந்தது. இந்த வழிபாட்டினை 21 அஷ்டமிகள் விரதம் இருந்து செய்து வந்தால் கால பைரவர் உங்களுக்கு துணையாக இருந்து உங்களுக்கு நன்மையான அனைத்தையும் நடத்தி தருவார்.
பைரவர் வழிபாட்டின் நன்மைகள்
- மனதில் இருந்து பயம் நீங்கும்.
- தீயசக்திகளின் தாக்கம் அகலும்.
- கடன் தொல்லைகள் தீரும்.
- தீராத வழக்குகள் சாதகமாக முடியும்.
- தீராத நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
- பில்லி சூனிய பாதிப்புகள் நீங்கிவிடும்.
- வேலையில் மதிப்பு, மரியாதை, பதவி உயர்வு கிடைக்கும்.
- தொழிலில் லாபம் ஏற்படும்.
- செல்வ செழிப்பு உண்டாகும்.
பைரவர் வழிபாடு செய்யும் போது சிவப்பு நிற உடையணிந்து செய்வது மிகவும் சிறப்பு. அஷ்டமி என்பது வழிபாட்டிற்கு உகந்த மிகவும் சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் கால தெய்வமான காலபைரவரை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வேறு எந்த நாட்களில் பைரவரை வழிபடலாம்?
அஷ்டமி திதி தவிர, ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம் நட்சத்திரங்கள் வரும் நாட்களிலும், சனிப் பிரதோஷ நாட்களிலும் பைரவரை வழிபட்டால் வேலையில் மதிப்பு, மரியாதை, பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் லாபம் ஏற்படும். அதே போல் சனிப் பிரதோஷம் வரும் நாட்களிலும் கால பைரவருக்கு தயிர் சாதம் நைவேத்தியமாக படைத்து வழிபட்டால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தாமரை, வில்வ இலைகளால் மாலை கட்டி போட்டு வணங்கினால் செல்வ செழிப்பு ஏற்படும்.