மெலஸ்மா என்பது முகத்தில் தோன்றும் பழுப்பு அல்லது நீல சாம்பல் நிற திட்டுகள் ஆகும். சருமத்தின் நிறத்தை உருவாக்கும் செல்களின் அதிகப்படியான உற்பத்தி காரணமாக இது உண்டாகிறது. இது பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், முக அழகை பாதிக்கலாம். டாக்டர் ஹரிஷ் விளக்கும் மங்கு பாதிப்பை மேலும் தூண்டும் 5 முக்கிய விஷயங்கள் இங்கு:
1. சூரிய ஒளியால் வெளிப்படுவது
சூரியனிடமிருந்து வெளிவரும் புற ஊதாகதிர்கள் சருமம் மற்றும் கூந்தல் இரண்டிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியும். டாக்டர் ஹரிஷ் கூற்றுப்படி, மங்கு வருவதற்கும் இந்த சூரிய ஒளி காரணமாக இருக்கிறது. சூரிய ஒளி சருமத்தில் படும் போது கருமையான புள்ளிகள் மேலும் மோசமாகும். குறிப்பாக சன்ஸ்க்ரீன் இல்லாமல் வெளியே செல்லும் போது மங்கு தீவிரமாக தூண்டப்படுகிறது. சருமத்தை சூரியனிடமிருந்து பாதுகாக்க சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவது மங்கு, கரும்புள்ளி மற்றும் சரும தடிப்புகளை தடுக்க உதவும்.
2. சமைக்கும் போது வரும் சூடு
இந்திய பெண்கள் நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் சமையலறையில் இருக்கிறார்களாம். சமைக்கும் போது வெளிப்படும் வெப்பமான ஆவியானது மெலனின் செல்களை அதிகப்படுத்தி, மங்குவை அதிகரிக்க செய்கிறது. இந்த வெப்பமான ஆவி நேரடியாக முகத்தையே பாதிக்கிறது. எண்ணெய் தாளிப்புகளில் வெளிப்படும் சூடு இன்னும் அதிகம். மங்கு தீவிரமாகாமல் தடுக்க இயன்றவரை கேஸ் அடுப்பின் பக்கமே நிற்காமல் தவிர்ப்பது நல்லது.
3. ஸ்டீராய்டு க்ரீம்கள்
சரும பிரச்சனைக்கு பலரும் சுயமாக ஸ்டீராய்டு க்ரீம்களை பயன்படுத்துகின்றனர். மங்கு போன்ற பிரச்சனைக்கு ஸ்டீராய்டு க்ரீம்கள் உடனடியாக பலன் தந்தாலும், அவை சரும அடுக்கின் நான்கு லேயர்களையும் பாதிக்க செய்யும். இது சருமத்துக்கு இன்னும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும். எந்த சரும பிரச்சனைக்கும் சுயமாக மருந்து பயன்படுத்தாமல், சரும பராமரிப்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது.
4. கருத்தடை மாத்திரைகள்
பெண்கள் கருத்தரிப்பை தள்ளிப்போட வாய்வழி கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துகிறார்கள். இந்த மாத்திரைகள் ஹார்மோன்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், மங்கு கருமையான திட்டுகளை உண்டு செய்யும் என்கிறார் டாக்டர் ஹரிஷ். கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்தும் போது என்னென்ன பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும் என்பதை அறிந்து செயல்படுவது அவசியம்.
5. உதடுக்கு மேல் வேக்ஸிங்
சில பெண்கள் உதட்டுக்கு மேல் வேக்ஸிங் செய்யும் பழக்கம் கொண்டிருப்பார்கள். இவர்கள் அடிக்கடி வேக்ஸிங் செய்யும் போது இவர்களுக்கு மங்கு தூண்டுதல் அதிகமாக இருக்கும். மேற்கண்ட இந்த குறிப்புகளை பின் தொடரும் போது மங்கு இன்னும் கருமையாக மாறலாம். இந்த பாதிப்பு இருப்பவர்கள் சரும பராமரிப்பு மருத்துவரை அணுகி சிகிச்சை செய்துகொள்வதன் மூலம் அவை பாதுகாப்பாக குறைக்கப்படலாம் என்கிறார் டாக்டர் ஹரிஷ்.