சாணக்கியரின் நீதிமொழிகள் தொழில், வியாபாரம், அரசியல், குடும்பம், திருமண வாழ்க்கை என அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றத்தைக் கொண்டுவர உதவுகின்றன. ஒவ்வொரு துறையினரும் எவ்வாறு செயல்பட வேண்டும், அதன் மூலம் எப்படி வெற்றி பெறலாம் என்பதை சாணக்கியர் தெளிவாக விளக்கியுள்ளார்.
இலக்குகளை மனதில் கொள்ளுங்கள்
தொழில் செய்தாலும், உத்தியோகத்தில் இருந்தாலும் உங்களுக்கான இலக்குகளை நிர்ணயிக்கவும். அதன் இலக்குகளை அடைய திட்டமிடுவதோடு, அதற்காகச் சிறு சிறு படியை முன்னெடுத்து வைக்கவும். ஒரு கட்டத்தில் நீங்களே வியக்கும் வகையில் உங்களின் இலக்கு மிக அருகில் இருப்பதை உணர்வீர்கள். உங்களின் வெற்றிப் பாதை எளிதாகும்.
இவர்களிடம் விலகி இருங்கள்
உங்களிடம் நெருங்கிப் பழகினாலும், உங்களின் முதுகுக்குப் பின்னால் பேசக்கூடிய, பிரச்சனைகளை உருவாக்கக்கூடிய நபர்களிடமிருந்து எப்போதும் விலகி இருங்கள். இவர்களால் அதிகம் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம். எனவே, தவறுதலாகக்கூட அவர்களை எளிதில் நம்பாதீர்கள்.
ரகசியம், ரகசியமாக இருக்கட்டும்
உங்களின் நண்பர்கள், நம்பிக்கைக்குரிய நபர்கள் எனக் கருதும் சிலரிடம் கூட, உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இது உங்களுக்கிடையே மனக்கசப்பு, சண்டை ஏற்படும் போது, அவர்களிடம் நீங்கள் கூறிய ரகசியங்களை, உங்களுக்கு எதிராகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. பாதகமான சூழ்நிலையில் மேலும் சிரமங்களை அதிகரிக்கலாம். எனவே, உடன்பிறந்தவர்கள் மற்றும் பெற்றோரைத் தவிர யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.
சுயநல நண்பர்கள் வேண்டாம்
சுயநலம் பிடித்த நண்பர்களிடமிருந்து விலகி இருங்கள். அப்படிப்பட்ட நண்பர்கள் அல்லது அறிமுகமானவர்களிடமிருந்து உடனடியாக விலகிவிடுங்கள். தங்களின் வேலைகளை எளிதாக்கிக் கொள்வதற்காக மட்டும் சிலர் உங்களைப் பயன்படுத்திக்கொள்வார்கள். மற்ற நேரத்தில் உங்களை ஒரு பொருட்டாகக் கருத மாட்டார்கள்.
நேர்மையாக, சத்தியத்தின் பக்கம் நில்லுங்கள்
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, உங்கள் வார்த்தைகளிலும், செயலிலும் எப்போதும் தெளிவாகவும், நேர்மையாகவும் இருங்கள். உங்கள் எல்லா வேலைகளையும் நேர்மையாகச் செய்யுங்கள். எண்ணங்களிலும், அதைச் செயல்படுத்தக்கூடிய செயலிலும் தெளிவும், இயல்பிலேயே பணிவானவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். அத்தகையவர்கள் மிகவும் தூய்மையான இதயம் கொண்டவர்கள். யாரைப் பற்றியும் தவறாக நினைக்க மாட்டார்கள், துரோகம் செய்ய மாட்டார்கள். உங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு தருணத்திலும் சத்தியத்தின் பக்கம் நிற்கவும். வேகமாக முன்னேற அல்லது சிலருக்கு ஆதரவாக, அதர்மத்தின் பக்கத்தில் நிற்காதீர்கள். சத்தியத்தின் பக்கம் நிற்பதால் உங்களுக்கு சவால்கள் இருந்தாலும் ஒரு நாள் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
கடின உழைப்பு
உங்கள் வாழ்க்கையில் பெரியளவில் வெற்றி அடைய விரும்புபவர்கள், சோம்பலிலிருந்து விலகி இருக்கவும். சவால்களைக் கண்டு பயப்படாதீர்கள். வெற்றியை அடைய கடினமாக முயற்சி செய்யத் தயங்காதீர்கள். இது வெற்றிக்கான வாய்ப்புகளைப் பெரிதும் அதிகரிக்கும்.