ஆயுர்வேதம் நோய்களை மட்டும் குணப்படுத்துவதில்லை; அது உடலைச் சுத்தம் செய்து, மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. ஜோதிடம் போன்ற பாரம்பரிய அறிவுடன், தமிழ் கலாச்சாரத்தில் ஆயுர்வேதமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. வளரும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் மனதை கூர்மையாக்கும் மூன்று அற்புத மூலிகைகளைப் பற்றி இங்கு விரிவாகக் காண்போம்.
சங்கு புஷ்பம்
சங்கு புஷ்பம், அதன் அழகு மட்டுமல்லாமல், ஏராளமான மருத்துவ குணங்களையும் கொண்டது. இது வாதம் மற்றும் பித்தத்தை சமநிலைப்படுத்துகிறது. மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, டோபமைன் மற்றும் செரடோனின் உற்பத்தியை மேம்படுத்துவதன் மூலம் மூளை சிறப்பாகச் செயல்பட உதவுகிறது. இதன் விளைவாக, நினைவாற்றல் திறன் மேம்படும்.
அஸ்வகந்தா
அஸ்வகந்தா ஒரு சூப்பர்ஃபுட்ஸ்க்கு இணையாகச் செயல்படும் மூலிகை. இரவில் பாலுடன் கலந்து அருந்தும்போது நல்ல தூக்கத்தை மேம்படுத்தி, மூளை செல்கள் புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவுகிறது. இது கார்டிசோல் உற்பத்தியைக் குறைத்து, மன அழுத்தத்தைக் குறைக்கவல்லது. உணர்வு ரீதியான சமநிலையை எட்டவும், நரம்பு மண்டலத்தின் இயக்கத்தை சீராக வைத்திருக்கவும் அஸ்வகந்தா துணைபுரிகிறது.
வல்லாரை
வல்லாரை என்றாலே மூளையின் வளர்ச்சிக்கு சிறந்தது என்பது நாம் அறிந்ததே. வல்லாரை சாப்பிடுவதால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும், சிந்தனைத் திறன் மற்றும் ஞாபக சக்தி மேம்படும். இதன் இலைகளின் அமைப்பே மூளையின் அமைப்பை ஒத்திருக்கும். குழந்தைகளுக்கு பதட்டத்தைக் குறைத்து, கவனச்சிதறல் ஏற்படாமல் தடுக்க வல்லாரை ஒரு சிறந்த ஆயுர்வேத மூலிகையாகக் கருதப்படுகிறது.
யோகாவும் ஆயுர்வேதமும்: ஒருங்கிணைந்த அணுகுமுறை
ஆயுர்வேதத்துடன் சேர்ந்து யோகாசனங்களும் இணைத்து செய்யும்போது மன ஆரோக்கியம் மிகச்சிறப்பாக மேம்படுவதாக பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. குறிப்பாக, ஜர்னல் ஆஃப் ஆயுர்வேதா இன்டகிரேட்டட் மெடிக்கல் சயின்ஸஸ் (JAIMS) ஆய்வுக் கட்டுரையில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இது மன அழுத்த எதிர்ப்பு மற்றும் பதட்ட எதிர்ப்பு மருந்துகளாகவும் செயல்படுகிறது. பிராணாயாமம் மற்றும் ஆசனங்கள் இணைந்து செய்யும்போது நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்படுவதோடு, கார்டிசோல் அளவையும் குறைத்து மன ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது. சிறுவயது முதலே இதை பழக்கப்படுத்தும் போது குழந்தைகளின் கவனத்திறனும் நினைவாற்றலும் மேம்படும்.
இறுதியாக,
மேற்கண்ட மூன்று வகையான ஆயுர்வேத மூலிகைகளையும் சிறுவயது முதலே குழந்தைகளுக்கு கொடுத்து வர, அவர்களுடைய ஞாபகத் திறன் மேம்படும், படிப்பில் கவனம் அதிகரிக்கும். கவனச்சிதறல் மற்றும் பதட்டம் ஏற்படுவது குறையும்.