மாதங்களில் மிகவும் சிறப்புக்குரிய மாதமாகவும், புண்ணியம் சேர்க்கும் மாதமாகவும் கருதப்படுவது ஆடி மாதமாகும். மாதம், கிழமை, திதி, நட்சத்திரம் என அனைத்து வகையிலும் சிறப்பு பெறும் மாதமாக ஆடி மாதம் திகழ்கிறது. இந்த மாதத்தில் வரும் அனைத்து நாட்களுமே சிறப்பு மிக்கதாக கருதப்படுகின்றன. அம்மன் வழிபாட்டிற்கும், முன்னோர் வழிபாட்டிற்கும் ஏற்ற மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. இது தட்சணாய காலத்தின் துவக்க மாதமாகும். ஆடி மாதத்தில் தான் சூரியன் தெற்கு நோக்கிய தனது பயணத்தை துவக்குவதாக சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும், கிராம காவல் தெய்வ கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தியும், திருவிழா எடுத்தும் பக்தர்கள் கொண்டாடுவது வழக்கம்.
ஆடி மாதத்தின் சிறப்புக்கள்
பல்வேறு ஆன்மிக சிறப்புகளைக் கொண்ட ஆடி மாதம் இந்த ஆண்டு ஜூலை 17ம் தேதி வியாழக்கிழமை அன்று தேய்பிறை அஷ்டமி நாளில் துவங்குகிறது. ஜூலை 17ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 16ம் தேதி வரை ஆடி மாதம் உள்ளது. ஆடி மாதத்தில் அனைத்து நாட்களும் சிறப்புக்குரியது என்றாலும் ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் ஆகிய கிழமைகள் மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகின்றன. இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 5 வெள்ளிக்கிழமைகளும், 4 செவ்வாய் கிழமைகளும் வருகின்றன. காவல் தெய்வமாக கருதப்படும் கால பைரவருக்கு உகந்த தேய்பிறை அஷ்டமியில் ஆடி மாதம் துவங்குவது மேலும் சிறப்பு.
ஆடி மாதத்தில் செய்ய வேண்டிய முக்கிய வழிபாடுகள்
- புனித நதிகளில், கடலில் நீராடுவது மிகவும் விசேஷமானதாகும்.
- ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு பிதுர் கடமை நிறைவேற்ற வேண்டும்.
- அமாவாசை விரதம் கடைபிடிக்காதவர்கள் ஆடி அமாவாசை முதல் விரதம் துவங்கி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதால் பித்ருதோஷம் விலகும்.
- ஆடி மாதத்தில் வளர்பிறை தசமியில் திக் தேவதா விரதம் இருந்து வணங்கினால் நினைத்தது நடக்கும்.
- ஆடி செவ்வாய் கிழமைகளில் அம்மன் கோவில்களில் எலுமிச்சம் பழ விளக்க ஏற்றினால் அதிக பலன் கிடைக்கும்.
- ஆடி மாத வளர்பிறை துவாதசி துவங்கி, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி வரை பெண்கள் துளசிக்கு பூஜை செய்து வழிபட்டு வந்தால் நினைத்தது நடக்கும். வீட்டில் அனைத்து செல்வங்களும் சேரும்.
- ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காமாட்சியை வேண்டிய விரதம் இருந்து வழிபட்டால் திருமண தடைகள் விலகும்.
- ஆடி மாதத்தில் மீனாட்சி அம்மனை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி நிலவும்.
- ஆடி மாதத்தில் மாரியம்மனை வழிபட்டால் கண் திருஷ்டிகள் விலகும்.
- ஆடி மாத ஏகாதசியில் அன்னதானம் செய்தால் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்.
- ஆடி மாத ஏகாதசி மற்றும் துவாதசி நாட்களில் அரச மரத்தை வலம் வந்து வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
- ஆடி வெள்ளியில் மகாலட்சுமியை வழிபட்டு வந்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும்.
- ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ், பால் பாயாசம், சர்க்கரை பொங்கல் வைத்து வணங்கி, வீட்டில் அழைத்து வழிபடுவது சிறப்பு.
- ஆடி மாதத்தில் பெண் குழந்தைகள், சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து மங்கல பொருட்கள், தாம்பூலம் கொடுப்பது சிறப்பு.
- ஆடி பெளர்ணமியில் சிவ பெருமானுக்கு திருட்டுப்பால் அபிஷேகம் செய்து, மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் சிவ பெருமானின் அருள் கிடைக்கும். பகை விலகும்.